×

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்.. மக்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி, நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். ஈஸ்டர் திருநாளில் விரதமிருக்கும் கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் செலவழிக்காமல் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.

கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.

கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.க அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதைப் போலவே உண்மைகள் மீதும், நமது வெற்றி மீதும் இன்று இருள் படிந்திருக்கலாம்; ஆனால், அந்த இருள் அதிக காலம் நீடிக்காது. அதிக அளவாக 3 நாட்களில் இருள் விலகி ஒளி பிறக்கும் என்பது தான் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் உலகிற்கு சொல்லும் செய்தியாகும். இதை இன்னும் இரு மாதங்களில் நான் கண்ணாரக் காணப் போகின்றோம்.

தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். இவை சாத்தியமாக வேண்டுமானால், அவற்றுக்காக போராடும் சக்திகளுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். ஜனநாயகப் போரில் நாம் வெற்றியை அடைந்து, தமிழகத்திற்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுக்க வேண்டும்; அதற்காக கடுமையாக உழைக்க இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம். உண்மையையும், நேர்மையையும், உழைப்பையும் வஞ்சகர்கள் நினைத்தால் சிலுவையில் அறையலாம். ஆனால், அவற்றை அதிக காலத்திற்கு அடைத்தோ, மறைத்தோ வைக்க முடியாது; அவை மிகவும் விரைவாக உயிர்த்தெழும் என்பது தான் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும். தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இழந்த உரிமைகள், பெறத் தவறிய வெற்றிகள் ஆகியவற்றுக்கும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தி நிச்சயமாக பொருந்தும்.

அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் உயிர்த்தெழுந்த இந்த நாளில், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தமிழ்நாட்டில் தழைக்கவும் பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.

‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர். இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம். மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

கருணையைப் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர்கள் பலரும் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர்.

The post இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்.. மக்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Day of the Resurrection of Jesus Christ ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Selvapperundagai, Ramadas ,Dimuka ,General ,Wiko ,Easter ,Easter Feast of the Resurrection of Jesus ,Dinakaran ,
× RELATED அகிம்சை நெறியை உலகிற்கு...