×

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வாக்குசாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

*100 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் : நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்களில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில், தேர்தலுக்காக 1628 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா, நேற்று குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மனித சங்கிலி, பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல், விளம்பர பதாகைகள், சமையல் காஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டுதல், தேர்தல் வாக்குபதிவு அழைப்பிதழை தாம்பூல தட்டுடன் பொதுமக்களுக்கு வழங்குதல், விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தாலுகா அலுவலகம் அருகில், நேற்று மாவட்ட கலெக்டர் உமா, ‘தேர்தல் பருவம் – தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில், வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்டை பார்வையிட்டு, பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகளுக்கு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு, கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். மேலும், வைகுந்தம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

The post நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வாக்குசாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...