×

தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு

*அணை நீரை திறந்து விட கோரிக்கை

நித்திரவிளை : தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க ஆற்றின் குறுக்கே பரக்காணி – கணியன்குழி பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதனால் கடல் நீர் ஆற்றில் புகாமல் இருந்தது. மேலும் ஆற்றின் நீர்மட்டம் மூன்று அடி வரை உயர்ந்தது. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் நிலத்தடிநீர் உயர்ந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தடுப்பணையை ஒட்டி கணியன்குழி பகுதியில் ஆற்றின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு ஆற்றுநீரும் கடல் நீரும் சேர்ந்தே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆற்றில் மேல்வரத்து தண்ணீர் குறைந்ததால் வெள்ளப்பெருக்கின் போது ஆறு திசை மாறி சென்ற பகுதி வழியாக கடல்நீர் ஆற்றில் புகுந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் ஆறு உப்பாக மாறியது. உள்ளாட்சி நிர்வாகத்தால் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் அனைத்தும் உப்பாயின. இதனால் பொதுமக்கள் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டனர்.

எனவே தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பில் கிராம ஊராட்சி தலைவர்கள் ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க வேண்டும், ஆற்றில் தேங்கி நிற்கும் உப்புநீர் கடலில் வடிந்து செல்ல பேச்சிப்பாறை, சிற்றார் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உப்புநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று தடுப்பு சுவர் அமைக்கும் பணி முடிவடைந்தது. அவசர பணியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைக்க உதவிய கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகருக்கு பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் தாமிரபரணி ஆற்றில் தேங்கி நிற்கும் உப்புநீர் கடலில் வடிந்து செல்ல பேச்சிப்பாறை, சிற்றார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

The post தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Nithravilai ,Parakani ,Kanyankuzhi ,Dinakaran ,
× RELATED தீவினைகள் களையும் ஸ்ரீ பிரணவேஸ்வரர்