×

செல்போன்களின் அபரிமிதமான வளர்ச்சியால் மாறிவரும் தேர்தல் களம்: இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களில் அதிக அக்கறை காட்டும் வேட்பாளர்கள்

* செலவினங்களை குறைக்க புதிய முயற்சி, வீதிவீதியாக கூவிக்கூவி ஓட்டு கேட்கும் காலம் மாறியது

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் மீது மக்கள் வைக்கின்ற நம்பிக்கை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி புதிய அரசாங்கத்தை தேர்வு செய்கின்றனர். அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர்கள் மக்களை வழி நடத்துவார்கள். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பை தருவார்கள். அந்த வகையில் காலங்காலமாக ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது வேட்பாளர்கள் பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

பெரிய கட்சியினர் முதல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வரை தங்களது பங்கிற்கு பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களது வாக்குகளைப் பெற முயற்சி செய்து வருகின்றனர். கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை தேர்தல் நடந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அறவே கிடையாது. மேலும் செல்போன் பயன்பாடுகளும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பத்திரிகைகள் மற்றும் வானொலி உள்ளிட்டவை வாயிலாக பொதுமக்கள் தகவல்களை தெரிந்து வந்தனர்.

இதன் காரணமாக வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தங்களது தேர்தல் வாக்குறுதி மற்றும் எந்த கட்சியில் நாங்கள் நிற்கின்றோம், எந்த சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் சுவர் விளம்பரங்கள் மூலமும், கட்சிக் கொடிகள் மற்றும் தோரணங்கள் மூலமும் வேட்பாளர் யார், சின்னம் எது என்பது குறித்து அப்பகுதி வேட்பாளர்கள் அவர்களது தொகுதியில் சின்னங்களை பொது இடங்களில் வரைந்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் தெருமுனை கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் வாக்குகளைப் பெற்றனர். அதன் பிறகு தொலைக்காட்சி, சினிமா போன்றவை வந்த பிறகு தொலைக்காட்சி வாயிலாக பெரிய கட்சிகள் தங்களது விளம்பரங்களை ஒளிபரப்ப தொடங்கினர். மேலும் பத்திரிகைகள் வாயிலாகவும் தங்களது வாக்குறுதிகள் மற்றும் வேட்பாளர் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தனர்.  ஒரு காலகட்டத்தில் காலை முதல் இரவு வரை வீதிவீதியாகச் சென்று ஒவ்வொரு பாகமாக ஏரியாக்களை பிரித்திக் கொண்டு தொடர்ந்து அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் கட்சியினர் ஈடுபட்டனர்.

நாகரிக வளர்ச்சி மற்றும் செல்போன்களின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று அனைத்தும் மாறி வருகின்றன. வேட்பாளர்கள் எங்கு பிரசாரம் செய்கின்றனர், என்ன பேசுகின்றனர், என்ன நினைக்கின்றனர் என்பதை உடனடியாக சமூகவலைத்தளங்கள் வாயிலாக தெரியப்படுத்தி பொதுமக்களின் கவனத்தைப் பெற முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன்கள் மூலமாக வேட்பாளர்கள் அதிகளவில் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு அதன் மூலம் தாங்கள் செய்த பணிகள் மற்றும் தற்போது எந்த தொகுதியில் நிற்கின்றோம், அந்த தொகுதியில் அவர்கள் என்ன பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறித்து அனைத்து விவரங்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக அரசியல் கருத்துகள் பகிரப்படுவதால் இளைஞர்களும், இளைய தலைமுறை வாக்காளர்களும் அதில் ஆர்வமாக குறிப்பிட்ட சிலரின் அக்கவுண்டுகளை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இளைஞர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த காலம் மாறி, தற்போது சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் அவர்களும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது வேட்பாளர்களுக்கு ஒரு வகையில் நன்மையாக இருந்தாலும், மற்றொரு வகையில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் கூட எளிதில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களை சென்றடைந்து விடுகிறது. மேலும் அதனை பல நேரங்களில் திரித்தும் வெளியிடுகின்றனர்.

இதனால் எது உண்மையான தகவல், எது பொய்யான தகவல் என்பதை யூகிக்க முடியாமல் சில நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குழம்பி விடுவதும் உண்டு. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாக்கு சேகரிக்க வெளியே சென்று, மீண்டும் அவர்கள் வீட்டுக்குள் செல்லும் வரை அனைத்தையும் செல்போன் மூலமும், கேமரா மூலமும் பலரும் கண்காணிக்கின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் வேட்பாளர்கள் தவறு செய்தாலும் அதனை சுட்டிக்காட்டி பெரிதாக மீம்ஸ் போட்டு வறுத்து எடுத்து விடுகின்றனர்.

இதனால் பொது இடங்களில் வேட்பாளர்கள் வாயை திறக்கவே அஞ்சுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி அதன் மூலம் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு பணம் மிச்சமாவதாகவும் வேட்பாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

தேர்தல் நடப்பது பெரும்பாலும் கோடை காலம் என்பதால் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பிரசாரம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பிரசாரம் செய்ய போகும்போது வேட்பாளருடன் 5 நபர்களை மட்டும் அழைத்துச் சென்றால் யாரும் மதிக்க மாட்டார்கள். இதனால் வேட்பாளர் செல்வதற்கு ஒரு வாகனம், அவர் முன்னாடி செல்வதற்கு பேண்டு வாத்தியம், பின்னாடி செல்வதற்கு குறைந்தது 100 பேரை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பேரணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

அவ்வாறு வரும் 100 பேருக்கும் தண்ணீர், போக்குவரத்து செலவு, உணவு மற்றும் அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது பணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் வரையாவது செலவு ஆகும். இதனால் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தலுக்கு முந்தைய கடைசி 10 நாட்கள் மட்டுமே இவ்வாறு ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரத்தில் இரவில் பொதுக்கூட்டம் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்போது இளம் வாக்காளர்கள் மற்றும் படித்த வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் குறித்த தகவல் எளிதில் சென்றடைகிறது. இதன் மூலம் 10 பைசா செலவு இல்லாமல் வேட்பாளர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக ஏற்கனவே அவர்கள் தொகுதியில் உள்ள முக்கிய நபர்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்துள்ளனர். மேலும் குடியிருப்போர் நல சங்கங்கள், இதர சங்கங்களில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் குரூப் நடத்தி வருகின்றனர். இதன் மூலமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது கட்சியின் பக்கத்தில் தேர்தல் சம்பந்தமான அனைத்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதுவும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்வதற்காக பெரிய கட்சிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி அதற்கு நிர்வாகிகளையும் போட்டு வைத்துள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிவீதியாகச் சென்று கூவிக்கூவி ஓட்டு கேட்ட காலம் மாறி சமூக வலைததளங்கள் வாயிலாக ஓட்டு கேட்பதற்காகவே தனியாக ஒரு பிரிவை தயார் செய்து அதற்கு நிர்வாகிகளையும் போட்டு வைத்து தங்களை அப்டேட் செய்து வருகின்றனர் அரசியல் கட்சியினர். தேர்தலில் வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து இனி சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு யாரும் தேர்தலை சந்திக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலை வந்துவிட்டது.

இதனால் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்பது கட்சிகளுக்கு இன்றியமையாத ஒரு வரப்பிரசாதமாக மாறிவிட்டது என்றே கூறலாம். இனி வரும் காலங்களில் வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரசாரங்களில் ஈடுபடுவார்களா அல்லது பிரசாரம் முதல் வாக்குப்பதிவு வரை அனைத்தும் செல்போன் மூலமாக நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post செல்போன்களின் அபரிமிதமான வளர்ச்சியால் மாறிவரும் தேர்தல் களம்: இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களில் அதிக அக்கறை காட்டும் வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது...