×

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் காற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்: கண்ணீரில் தத்தளிக்கும் 5 லட்சம் மீனவ குடும்பம்; படகுகள் சிறைபிடிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு

வேதாரண்யம்: தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் உள்ளது. எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை கைது செய்வது, தாக்கி விரட்டி அடிப்பது, துப்பாக்கி சூடு நடத்துவது ஆகிய இலங்கை கடற்படையின் அட்டகாசம் ஆண்டாண்டு காலமாக உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதோடு அண்மைகாலமாக இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசமும் தலையெடுத்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, பாம்பனில் பாஜ சார்பில் ‘கடல் தாமரை’ என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ், ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். இதேபோல் 2014 தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதியில், மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலம் கண்டறிந்து அதுதொடர்பான தகவல் மீனவர்களின் செல்போன்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று மீன்களை அதிகளவில் பிடிக்கலாம். குஜராத்தில் உள்ள இந்த திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த வாக்குறுதிகள் எல்லாம் இன்றுவரை கானல் நீராகவே உள்ளது.

கடந்தாண்டு மட்டும் தமிழக மீனவர்கள் 248 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சிலரை விடுவிப்பதும், சிலருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை வழங்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை விடுவிப்பதில்லை. இதனால் படகுகளுக்கு சொந்தமான மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி விடுகிறது. மீனவர்களை கைது செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், இது தொடர்பாக ஒன்றிய அரசு, இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் போராட்டம் நடத்தாத நாளில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இதனால் மீனவர்கள் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே தினமும் கடலுக்கு செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை மீனவ பஞ்சாயத்தார் சுப்பிரமணியன் கூறுகையில், ‘பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது உடமைகள், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இதுதொடர்ந்து நடந்தால், வருங்காலத்தில் மீன்பிடி தொழிலே இல்லாமல் போய்விடும். கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுப்பதோடு இந்திய கடற்படையினரை தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்,’ என்றார்.

The post தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் காற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்: கண்ணீரில் தத்தளிக்கும் 5 லட்சம் மீனவ குடும்பம்; படகுகள் சிறைபிடிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Lankan navy ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர்...