×

நுழைவுத்தேர்வு என்ற பெயரில் படித்தவனை படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா? கமல்ஹாசன் கேள்வி

ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வெப்படை ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வீரப்பன்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ஒன்றிய பிரதமர் தமிழகம் வரும்போது, மழலை தமிழில் இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளைப் பேசுவார். தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிட கூட்டம் இது என்று அங்கே பேசிக்கொள்கிறார்கள். வடநாட்டில் கட்டபொம்மன், வஉசிதம்பரனார், காமராஜர் என்று யாராவது பெயர் வைத்து இருக்கிறார்களா? ஆனால் நம் மாநிலத்தில் காந்தி, நேரு, போஸ், படேல் என பலருக்கும் பெயர் வைத்துள்ளோம். நீங்கள் இப்போதுதான் படேலுக்கு சிலை எழுப்பினீர்கள். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்பவோ படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய்.

நாடு காப்பது என்பது வீரம். பத்திரிக்கையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? அது அவருக்கு புரியுமா?. எதுவாக இருந்தாலும் பளிச்சின்னு போட்டு உடைக்க வேண்டும் என்பது இந்த ஊர்க்காரர் சொல்லிக் கொடுத்தது தான். உண்மை எனும் போது தைரியமாக, பயப்படாமல் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி வந்து நம்மை சுரண்டிவிட்டு சென்று விட்டனர். தற்போது மேற்கிந்திய கம்பெனி நம்மை சுரண்டி கொண்டிருக்கிறது. நாம் இங்கே காலை உணவு, மதிய உணவு போட்டு குழந்தைகளை வரவழைத்து கல்வி கற்க வைக்கும்போது, எங்கே நம் பிள்ளைகள் படித்து முன்னேறி விடுவார்களோ என்று அவர்கள் எழுத முடியாத தேர்வுகளை எல்லாம் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கொடுக்க வேண்டிய பாக்கியைக் கேட்டால் கொடுத்ததே பிச்சைதானே என்று சொல்லும் ஒன்றிய அரசு.

கருப்புப்பணம் ஒழிப்பு என்று ஒரு வடை சுட்டார்கள். அந்த வடை வாயால் சுட்ட வடை. கருப்பு பண முதலைகளை பிடிப்பேன் என்று சொன்னவர்கள், மீன்களைப் போன்ற மக்களைக் கொன்று விட்டனர். காலை உணவு தந்து கல்வி தரும் அரசு வேண்டுமா அல்லது நுழைவுத்தேர்வு மூலம் படித்தவனையும் படிக்காதவர் ஆக்கும் அரசு தேவையா?. மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் அரசு தேவையா? பில்கீஸ் பானு குற்றவாளிகளை வெளியில் விடும் அரசு தேவையா – விவசாயிகளை காக்கும் அரசு வேண்டுமா? அவர்கள் மீது போர் தொடுக்கும் அரசு வேண்டுமா, தொழில்களை ஊக்கப்படுத்தும் அரசு வேண்டுமா – ஜிஎஸ்டி போட்டு சிறுகுறு வியாபாரிகளை நெருக்கும் அரசு வேண்டுமா?, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் அரசு வேண்டுமா? – ஜனாதிபதியாக இருந்தாலும் வெளியில் நிற்க வைக்கும் கோயில் நடத்தும் அந்த அரசு வேண்டுமா.

The post நுழைவுத்தேர்வு என்ற பெயரில் படித்தவனை படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா? கமல்ஹாசன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kamalhassan ,Erode ,K ,Dimuka Alliance ,Prakash ,People's Justice Mayam ,Veerapbansatram ,Karangalpalayam ,Namakkal District ,Vebadai ,Veeraphansatra ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...