×

13 வது முறை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மத்திய சென்னை தொகுதியை கைப்பற்றப்போவது யார்? மும்முனை போட்டியால் அனல்பறக்கும் அரசியல் களம்

தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மத்திய சென்னை 4வது தொகுதியாக உள்ளது. அதன்படி, கடந்த 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி இந்தியாவின் மிகச்சிறிய தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், கடந்த 2008ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன், மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்டு பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. மேலும், தனித்தனி தொகுதியாக இருந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டது.

அதேபோல், வில்லிவாக்கம் தொகுதி மத்திய சென்னையில் இணைக்கப்பட்டது. மறுசீரமைப்புக்குப் பின் தற்போது வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 1977ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் முதல் தேர்தலை சந்தித்த மத்திய சென்னையில் நிறுவன காங்கிரஸ் கட்சி சார்பில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதன் பின்னர், நடந்த தேர்தல்களில் திமுகவின் கை இந்த தொகுதியில் ஓங்கியே இருந்தது. குறிப்பாக, 12 தேர்தல்களில் திமுக போட்டியிட்டு 8 முறை வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தலா 3 முறை இந்த தொகுதியில் தங்களின் வெற்றியை பதிவு செய்துள்ளனர். அதிமுக கடந்த 2014ம் ஆண்டு ஒரே ஒருமுறை மட்டும் வெற்றியை தனதாக்கியது.

சென்னையின் முக்கிய அடையாளங்களாக திகழும் சென்னை உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி, சேப்பாக்கம் மைதானம், மெரினா கடற்கரை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் இங்கு அமைந்துள்ளன. அதேபோல், இஸ்லாமியர்கள், படித்தவர்கள், வணிகர்கள் ஆகியோரின் வாக்குகள் கணிசமாக உள்ளன. இந்த தொகுதியின் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுவது கூவம் மறுசீரமைப்புக்கான தீர்வு எப்போது, போக்குவரத்து நெரிசல், ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பிட வசதி போன்றவைகள் இப்பகுதி மக்களின் பெருங்குறையாக உள்ளன. குறிப்பாக, போதிய எண்ணிக்கையில் சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்கள் இல்லாமல் ரயில் பயணிகள் அவதியுறுகின்றனர். மேலும், எழும்பூர் – சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் 4வது முறையாக திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத்தில் பாஜ அரசு கொண்டு வந்த மக்கள் நலனுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள், பொது சிவில் சட்டம், குடியுரிமை மசோதா, விவசாயிகள் பிரச்னைகள் என அனைத்திற்கும் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் தயாநிதி மாறன். எப்போதுமே, மக்களவையில் தனித்துவமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கேள்விகளை முன் வைப்பதில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துள்ளார். மேலும், மத்திய சென்னை திமுகவின் கோட்டையாக தற்போது வரை திகழ்வதால் வெற்றி வாய்ப்பு என்பது இவருக்கு சாதகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜ தரப்பில் வினோஜ் பி செல்வம் இந்த தொகுதியில் களம் காண்கிறார். 6 தொகுதிகளை கொண்ட இங்கு துறைமுகம், ஆயிரம் விளக்கு போன்ற சட்டமன்ற தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளாக பாஜ கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு வாக்குகளை மக்களிடம் கேட்டு வருகிறார் பாஜ. ஆனால், இந்த முயற்சி எந்த அளவிற்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. இதுதவிர, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும் போட்டியிடுவதால் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, இந்த மத்திய சென்னை தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் பாஜ, தேமுதிக இரண்டும் போட்டியிட்டு பரப்புரைகளை மேற்கொண்டு வந்தாலும், திமுக வசமே இந்த தொகுதி மீண்டும் அடைக்கலமாகும் என மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தொகுதி யார் வசம்
* வில்லிவாக்கம் வெற்றியழகன் (திமுக)
* எழும்பூர் பரந்தாமன் (திமுக)
* துறைமுகம் சேகர்பாபு (திமுக)
* சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் (திமுக)
* ஆயிரம்விளக்கு எழிலரசன் (திமுக)
* அண்ணாநகர் எம்.கே.மோகன் (திமுக)

* தொகுதி வாக்காளர் விவரம்
ஆண் 6,64,076
பெண் 6,78,658
மூன்றாம் பாலினத்தவர் 433
மொத்தம் வாக்காளர் 13,43,167

* தமிழகத்தில் விவிபேட் (VV-PAT) முறையை சோதனை செய்த தொகுதி
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VV-PAT) என்பது வாக்காளர்கள் தங்களின் வாக்கை செலுத்திய பின்னர், வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டது. இந்த சோதனை முதலில் 2013ம் ஆண்டு நாகாலாந்து மாநில தேர்தலில் நொக்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பொதுத்தேர்தலில் இச்சோதனையை மேற்கொள்ள, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் விவிபேட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, லக்னோ, காந்திநகர், பெங்களூரு (தெற்கு), ஜாதவ்பூர், ராய்ப்பூர் பாட்னா, மிசோரம் மற்றும் மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்திலேயே முதன்முறையாக விவிபேட் முறை மத்திய சென்னை தொகுதியில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு தேர்தல் களம்
வேட்பாளர் கட்சி வாக்குகள் சதவீதம்
தயாநிதி மாறன் திமுக 4,48,911 57.15%
சாம் பால் பாமக 1,47,391 18.77%
கமீலா நாசர் ம.நீ.ம 92,249 11.74%
கார்த்திகேயன் நா.த.க 30,886 3.93%

The post 13 வது முறை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மத்திய சென்னை தொகுதியை கைப்பற்றப்போவது யார்? மும்முனை போட்டியால் அனல்பறக்கும் அரசியல் களம் appeared first on Dinakaran.

Tags : Madhya Chennai ,13th General Election ,Tamil Nadu ,India ,Madhya ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன