×

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிப்பு ஒரே நாளில் ரூ.1120 எகிறியது: சவரன் 51 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் வேதனை; ஒன்றிய அரசு தலையிட கோரிக்கை

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1120 உயர்ந்தது. இதன் மூலம் தங்கம் விலை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை யாரும் எதிர்்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.4,400 உயர்ந்துள்ளது. இந்த ஜெட் வேகம் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் 55 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது.

இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘பொருளாதார துறை சார்ந்த பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம். அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கியே பயணிக்கும். வெள்ளியின் விலையும் அதிகரிக்கும். அடுத்த வாரம் இதன் புதிய உச்சம் என்ன என்பது தெரியவரும்’’ என்றார். தங்கம் விலை உயர்வுக்கு பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதும், சர்வதேச கச்சா எண்ணெய்க்கு ஏற்பவும் விலை உயருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஒன்றிய அரசு தங்கம் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தங்கத்தின் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். இறக்குமதி மீதான வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் தற்போது பறிபோய் உள்ளன. பெரும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. விமானநிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் அதிக வரிபோடுவதால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இப்போது தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகிவிடும் என்கின்றனர் பொதுமக்கள்.

The post தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிப்பு ஒரே நாளில் ரூ.1120 எகிறியது: சவரன் 51 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் வேதனை; ஒன்றிய அரசு தலையிட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Government ,CHENNAI ,Savaran ,Sawaran ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...