×

பவுஞ்சூர் பஜாரில் வாரசந்தை நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெரிசல்: உழவர் சந்தை அமைக்க வலியுறுத்தல்

செய்யூர்: பவுஞ்சூர் பஜார் பகுதியில் சாலையோரத்தில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க, அப்பகுதியில் உழவர் சந்தை அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பஜார் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இதில், பவுஞ்சூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாலையோரங்களை ஆக்கிரமித்து, தாங்கள் அறுவடை செய்த கம்பு, கேழ்வரகு, காய்கறி மற்றும் கீரை வகைகளை கடை பரப்பி விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விற்கப்படும் உணவு பொருட்கள் மலிவு விலை என்பதால், கூட்டம் அலைமோதி வருகிறது.

வாரச்சந்தை நாட்களில் பவுஞ்சூர் பிரதான நெடுஞ்சாலையின் இருபக்கங்களையும் ஆக்கிரமித்து கடை பரப்பி விற்பனை செய்து வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை விரைவாக கடந்து செல்ல முடியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் வாரச்சந்தை நடக்கும் சாலையோரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் மழைநீரில் அமர்ந்தபடி விவசாயிகள் விற்பனை செய்யும் அவலநிலையும் நீடித்து வருகிறது.

எனவே, பவுஞ்சூர் பஜார் பகுதியை ஒட்டியுள்ள காலி நிலத்தில் வாரச்சந்தை நாளில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு, அங்கு உழவர் சந்தை கட்டிடத்தை அமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பவுஞ்சூர் பஜாரில் வாரசந்தை நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெரிசல்: உழவர் சந்தை அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wara Market ,Seyyur ,Pounjoor ,Chengalpattu district ,Pounjoor… ,Pounjoor bazaar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...