×

கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்

பழநி, மார்ச் 29: கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழநி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானதாக உள்ளது. கோடை காலங்களில் முறையான நீர் நிர்வாகத்தை கடைபிடிக்கா விட்டால் தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் பாய்ச்சாவிட்டால் மரங்கள் கருகும் சூழ்நிலையும் ஏற்படும். கோடை காலங்களில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் மரங்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் உண்டாகிறது.

எனவே, தென்னந்தோப்புகளில் நீர் நிர்வாகத்திற்காக விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தென்னை மரங்களைச் சுற்றிலும் உள்ள வட்டப்பாத்தியில், ஓலைகளைக் கொண்டு நிரப்பி விடுகின்றனர். போர்வெல்களில் கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரை பண்ணை குட்டைகள் உருவாக்கி நிரப்பி வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேகரித்த பிறகு சொட்டு நீர் பாசனம் வாயிலாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதற்காக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்