×

ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்: போலீசார் பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் பாராட்டினர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அலாவுதீன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் 10 எண்ணிக்கைகள் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் இயந்திரத்தின் அருகே கீழே விழுந்து கிடந்தன.

இதனைக்கண்ட அலாவுதீன், பணத்தை எடுத்துச்சென்று செங்கல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், தனியார் வங்கிக்கு நேரில் சென்று அலாவுதீன் வங்கி அதிகாரிகளிடம், வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுக்காமல் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் கணினி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை எடுத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். மேலும், ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதில், செங்கல்பட்டு கோகுலாபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த மதுமிதா என்பதும், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் எடுக்க முயன்றதும், பணம் வர தாமதமானதால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என்று நினைத்து வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் மதுமிதாவை தொடர்பு கொண்டு பணம் மீட்கப்பட்டது குறித்து தகவல் அளித்தனர். மேலும், செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கூறினர். பின்னர், மதுமிதா தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசார் மதுமிதாவிடம் ரூ.5 ஆயிரத்தை வழங்கினர். பணத்தை பெற்றுக்கொண்ட மதுமிதாவின் குடும்பத்தினர் அலாவுதீனுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், அலாவுதீனின் நேர்மையை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் பாராட்டினர்.

The post ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்: போலீசார் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Alauddin ,ATM ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!