×

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.31.5 லட்சம் அதிரடி பறிமுதல்

பூந்தமல்லி: கோயம்பேடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது, தப்பிக்க முயன்றார். அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து பையை சோதனை செய்தபோது, ரூ.7 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பதும், சென்னை நெசப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்வதும் தெரிந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரி பாஸ்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.99 ஆயிரம் இருந்தது. விசாரணையில், பெரவள்ளூர் ராம் நகர் 1வது மெயின் ரோட்டை சேர்ந்த சித்ரா (52), உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
* புது வண்ணாரப்பேட்டை இளைய முதலி தெருவில், பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரை மடக்கி, சோதனை செய்தபோது, அவரிடம் ரூ.15 லட்சம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வஉசி நகரை சேர்ந்த குபேந்திரன்(45), உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வாசுகியிடம் ஒப்படைத்தனர்.

* சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல் மத்திய சிறை அருகே மாதவரம் தாசில்தார் வெங்கடாஜலபதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.4.5 லட்சம் இருந்தது. விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த ராஜீ ஜெகநாதன், தசாரி வெங்கடேஸ்வரா ராவ், ராம கோட்டால ஜெகநாதன் ஆகியோர் உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு செல்வது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.* நேற்று கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புதுவாயல் சந்திப்பு அருகே பழவேற்காட்டில் இருந்து வந்த காரை மடக்கி பிடித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

அதில், ரூ.4 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அதற்கான முறையான ஆவணம் இல்லை என தெரிந்த உடன் அந்த பணத்ததை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த பணத்தை கொண்டு வந்தது பழவேற்க்காடு பகுதி சேர்ந்த பெர்னல்டு(45) என தெரிய வந்தது. மேலும், பறிமுதல் ெசய்யப்பட்ட ரூ.4 லட்சத்தை பொன்னேரி சப் – கலெக்டர் சாஹே சன்கேத் பல்வந்த்யிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அருகில் சப் – கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் குமார், பறக்கும்படை அலுவலர் கண்ணன் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்தை பொன்னேரி உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.31.5 லட்சம் அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Flying Squad ,Selvam ,Koyambedu ,Dinakaran ,
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி