×

நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400 உள்நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு: ராஜிவ் காந்தி மருத்துவமனை அசத்தல்

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது. அந்த வகையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு, நோயாளிகளுக்கு ஏற்ற உணவு முறையில் உணவுகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 12,000 வெளிநோயாளிகள் வருகின்றனர். உள்நோயாளியாக கிட்டத்தட்ட 3800 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகளுக்கு தரமான, சுகாதாரமான மற்றும் நோயாளிகளுக்கு ஏற்ற உணவை மருத்துவமனை நிர்வாகம் அளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் வழங்கப்படும் இந்த உணவை விரும்பி சாப்பிடும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த உணவு தயாரிக்க கிட்டத்தட்ட 5000 சதுர அடியில் நவீன சமையலறை உள்ளது. 37 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. உணவு கூடத்தில் பணியாற்றுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ‘உங்கள் உணவு உங்கள் உரிமை’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி உணவுகளை அளித்து வருகிறோம் என ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனை என்றால் பால், பன் மட்டும்தான் என்று கூறுவார்கள். அதனை மாற்றும் வகையில் தற்போது வகை வகையான உணவு நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ‘உங்கள் உணவு உங்கள் உரிமை’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி உணவுகளை அளித்து வருகிறோம். இந்த உணவை சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்த வில்லை. ஆனால் நோயாளிகளுக்கு ஏற்ற உணவு முறை (diet) வழங்கி வருகிறோம். உள்நோயாளியாக கிட்டத்தட்ட 3800 படுக்கை உள்ளன. எப்போதும் 2400 படுக்கைகளில் நோயாளிகள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நோயாளிகளுக்கு தயார் செய்யப்படும் உணவை நான், மருத்துவமனை ஆர்எம்ஓ, செவிலியர் கண்கணிப்பாளர் என 3 பேர் தினமும் சாப்பிட்டு பரிசோதனை செய்கிறோம். அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 10 வகையான உணவுமுறை (diet) நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உணவுவியல் மருத்துவர் கலாராணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறை அடிப்படையில் 10 வகையான உணவு முறை வழங்கப்பட்டு வருகிறது. உணவை சுகாதாரமான முறையில் நவீன இயந்திரங்களை கொண்டு தயாரித்து வருகிறோம். குறிப்பாக சப்பாத்தி செய்ய சிறப்பு இயந்திரம் உள்ளது. கிட்டத்தட்ட 4000 சப்பாத்தி இதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. எந்தெந்த நோயாளிக்கு என்ன உணவு வழங்கப்படும் என்ற தரவுகள் அனைத்து அறைகளிலும் ஒட்டப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு அந்த தரவுப்படி வரவில்லை என்றால் அங்கு இருக்கும் செவிலியரிடம் தெரிவித்தால் அவர்கள் உணவை முறையாக கொடுப்பார்கள். வெளியில் தயாரிக்கப்படும் உணவு எண்ணெய் சுத்தமாக இருக்காது, காரமாக இருக்கும். நோயாளிக்கு ஏற்ற உணவாக இருக்காது. ஆனால் மருத்துவமனையில் தயாரிக்கும் உணவு நோயாளிக்கு ஏற்றவாறு இருக்கும். இதனால் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

 

The post நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400 உள்நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு: ராஜிவ் காந்தி மருத்துவமனை அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Hospital ,Rajiv Gandhi government ,Chennai ,
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...