×

ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது

ஐதராபாத், மார்ச் 28: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அபார சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 31 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 17 வயது இளம் வேகம் க்வெனா மகாபா அறிமுகமானார். சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், ஜெய்தேவ் உனத்கட் அறிமுகமாகினர்.

மயாங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட் இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் சற்று அடக்கி வாசிக்க, மறுமுனையில் ஹெட் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 45 ரன் சேர்த்தது. அகர்வால் 11 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் டேவிட் வசம் பிடிபட்டார். அடுத்து ஹெட் – அபிஷேக் ஷர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை பதம் பார்க்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் டாப் கியரில் எகிறியது. ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். ஹெட் – அபிஷேக் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தனர். ஹெட் 62 ரன் (24 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் நமன் திர் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து அபிஷேக் – மார்க்ரம் ஜோடி ருத்ரதாண்டவத்தை தொடர்ந்தது. அபிஷேக் 16 பந்தில் அரை சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தனர். அபிஷேக் 63 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அதன் பிறகும் சன்ரைசர்ஸ் ஸ்கோர் வேகம் சற்றும் குறையாமால் இறக்கை கட்டி பறந்தது. மார்க்ரம் – கிளாஸன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தனர். சிக்சர் மழை பொழிந்த கிளாஸன் தன் பங்குக்கு 23 பந்தில் அரை சதம் அடித்தார். இவர்களைப் பிரிக்க மும்பை பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது. மார்க்ரம் 42 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாஸன் 80 ரன்னுடன் (34 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ஹர்திக், கோட்ஸீ, சாவ்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவரில் 56 ரன் சேர்த்தது. இஷான் 34 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அவுட்டானார். மும்பை பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் சளைக்காமல் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு போராட்டத்தை தொடர்ந்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

ரோகித் 26 (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), நமன் திர் 30 (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 64 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டிம் டேவிட் 42 ரன் (22பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ரொமாரியோ ஷெப்பர்டு 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட், ஷாபாஸ் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். பரபரப்பான ஆட்டத்தில் முதல் வெற்றியை வசப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகள் பெற்றது.

* ஆர்சிபி சாதனை தகர்ப்பு
ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது (2013, ஏப். 13, பெங்களூரு). சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நேற்று 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.

டாப் 5 ஸ்கோர்
1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277/3
2. ராயல் சேலஞ்சர்ஸ் 263/5
3. லக்னோ எஸ்ஜி 257/5
4. ராயல் சேலஞ்சர்ஸ் 248/3
5. சென்னை சூப்பர் கிங்ஸ் 246/5

என்னா அடி!
4.4 ஓவரில் 50 ரன்
7 ஓவரில் 100 ரன்
10.2 ஓவரில் 150 ரன்
14.4 ஓவரில் 200 ரன்
18.4 ஓவரில் 250 ரன்
20 ஓவரில் 277 ரன்

The post ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Tags : Abhishek ,Markram ,Clausen ,Sunrisers' ,IPL ,Mumbai ,Hyderabad ,IPL league ,Mumbai Indians ,Sunrisers Hyderabad ,Sunrisers ,Dinakaran ,
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்