×

மக்களவை தேர்தல் பணியில் உடல்நலம் பாதித்தவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

 

விருதுநகர், மார்ச் 27: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபட்டாலும் வருவாய்த்துறையினரும், ஆசிரியர்களுமே முக்கிய பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் யார், யார் என்ற விபரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

ஆசிரியர் பணிகளில் இருப்பவர்களில் ஏராளமானோர் பெண்கள் என்பதால் இது போன்ற தேர்தல் பணிகளால் கடும் அவதியும், பாதிப்பும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தற்போது ஆசிரியர் பணிகளில் உள்ளவர்களில் ஏராளமானோர் பெண்கள். பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளித்து, கட்டாய தேர்தல் பணி கொடுப்பதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் சில மாவட்டங்களில் உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கூட நீங்கள் வேறு யாராவது ஒருவரை பணிக்கு அழைத்து வந்துவிட்டு நீங்கள் உங்கள் பணியை ரத்து செய்து கொள்ளுங்கள் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்.

உடல் நலமில்லாதவர்கள், உடல் உபாதைகள் உள்ளவர்கள் என தெரிவித்து மருத்துவ சான்றிதழ் வழங்கினாலும் பணி ரத்து செய்யப்படவில்லை. இதுபோன்ற பணிகளில் உடல் நலமில்லாதவர்களை ஈடுபடுத்துவதை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற தொகுதியை கணக்கில் கொள்ளாமல் யூனியன் விட்டு யூனியனில் பணி வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களை பயன்படுத்துவதை தவிர்த்து பிற துறை பணியாளர்களையும் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

The post மக்களவை தேர்தல் பணியில் உடல்நலம் பாதித்தவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Virudhunagar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...