×

காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வை 15,953 மாணவர்கள் எழுதுகின்றனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய, 10ம் வகுப்பு தேர்வை 15,953 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள், கடந்த 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4ம்தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நேற்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 140 மாணவர்கள், 7 ஆயிரத்து 813 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 953 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுகின்றனர். இதனால், 5 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களும், 5 வினாத்தாள் கட்டுக்காக்காளர்கள், 5 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 66 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 66 தேர்வு மையங்களுக்கும், 66 முதன்மை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இதைத்தவிர 66 துறை அலுவலர்களும், 5 கூடுதல் துறை அலுவலர்கள், 13 வழித்தட அலுவலர்கள், இவர்களுக்கு உறுதுணையாக தேர்வு பணிகள் கவனிப்பாளர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்வுகளின்போது, மாணவ – மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை கண்காணிக்க 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

The post காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வை 15,953 மாணவர்கள் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kanchipuram ,Tamil Nadu Department of School Education ,
× RELATED கருடன் கருணை