×

24.51 லட்சம் புத்தகங்கள் இருப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நூலகங்களில், 24.51 லட்சம் நூல்கள் இருப்பில் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில், நூலக குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் மதுரவாயில் கணபதி, தியாகராய நகர் கருணாநிதி, அரூர் சம்பத்குமார், பெரியகுளம் சரவணகுமார், முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின்குமார் ஆகியோர், நேற்று கிருஷ்ணகிரி மவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தை பார்வையிட்டு, வாசகர்களுடன் கலந்துரையாடினர். மேலும், மாவட்ட மைய நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். நூலகத்தில் இட வசதி குறைவாக இருப்பதால், போட்டித் தேர்விற்கு படிக்க தனி அறையும், கூடுதல் புத்தகங்களும் வழங்க வேண்டும் என போட்டித் தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று 6 மாதத்திற்குள் போட்டித் தேர்விற்கான கட்டிடம் கட்டி தரப்படும் என தெரிவித்தனர். மேலும், நூலகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படும் என தெரிவித்தனர்.

அப்போது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு புத்தகங்களை வழங்கினர். பின்னர், காவேரிப்பட்டணம் ஒன்றியம் நெடுங்கல் கிளை நூலகத்தை பார்வையிட்டு, கூடுதலாக கட்டிட வசதி ஏற்படுத்தி, நூலகம் விரிவாக்கம் செய்யப்படும் என்றனர். இந்த ஆய்வின் போது, புதியதாக தலா ₹1000 செலுத்தி 7 புரவலர்கள் சேர்ந்தனர். மாதவரம் எம்எல்ஏ சதர்சனம், தனது சொந்த நிதியில் இருந்து, ₹10ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக சேர்ந்து கொண்டார். தொடர்ந்து ஆவத்தவாடி ஊர்ப்புற நூலகம், போச்சம்பள்ளி முழு நேர நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், நூலகக் குழு தலைவர் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் நவீன அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, பொது நூலகத் திட்டத்தின் கீழ், பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 1 மாவட்ட மைய நூலகமும், 4 முழு நேர நூலகங்களும், 29 கிளை நூலகங்களும், 69 ஊர்ப்புற நூலகங்களும், 41 பகுதி நேர நூலகங்களும் என மொத்தம் 144 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நூலகங்களில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 873 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நூலகங்களில் மொத்தம் 24 லட்சத்து 51 ஆயிரத்து 444 நூல்கள் இருப்பில் உள்ளன.

மேலும், மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் டிவி, கம்ப்யூட்டர், சிறுவர் நூல்கள், சிறுவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டு பொருட்கள் ஆகியவை உள்ளன. மாவட்ட மைய நூலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், கம்ப்யூட்டர்கள், பிரெய்லி புத்தகங்கள் உள்ளது. போட்டித் தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக, பொது நூலக துறையால் பொது நூலகம் என்ற சேனல் உருவாக்கப்பட்டு, க்யூஆர் கோடு அனைத்து நூலகங்களிலும் ஒட்டப்பட்டு, மாணவர்களுக்கு தேவையான அன்றாடம் நாளிதழ், பருவ இதழ் முலம் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து பதிவேற்றம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கான இந்த வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலக நூலகக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, பொது நூலக இயக்குநரக இணை இயக்குநர் இளங்கோசந்தரகுமார், குழு அலுவலர் (துணை செயலாளர் நிலை) ராஜேந்திரன், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், பிடிஓ.,க்கள், நூலகர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 24.51 லட்சம் புத்தகங்கள் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu Assembly Library Committee ,Krishnagiri district ,Madhavaram Sudarsanam ,MLA ,Sarayu ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை