×

மாமல்லபுரம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்தாண்டு வட கிழக்கு பருவ மழை நவம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை கனமழை பெய்தது. இதனால், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை, பல்வேறு கிராம ஊராட்சிகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தது. குறிப்பாக, மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து சிறு, சிறு பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, விபத்து ஏற்படுத்தும் அபாயநிலையில் இருந்தது.

மேலும், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு சாலையில் உள்ள பள்ளங்களை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் குச்சிக்காடு பகுதியில் சேதமடைந்த சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் மேலோட்டமாக சுரண்டி எடுத்து ஜல்லிக்கற்கள் மீது தார் ஊற்றி சாலையை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மாமல்லபுரம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Highways Department ,North East ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...