×

சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுமான பணிகளில் விதிமீறல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தரப்பில் தகவல்..!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் அனுமதியில்லாமல் 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி கோயிலின் தீட்சிதரான நடராஜன் தீட்சிதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொது தீட்சிதர்கள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தொல்லியல்துறையுடன் இணைந்து தான் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்ய முடியுமே தவிர, தனிப்பட்ட முறையில் தொல்லியல்துறையை தமிழக அரசு பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று பொது தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம் அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு நடத்தியதில் விதிமீறல் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் இது சம்மந்தமான மற்றொரு வழக்கில், எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தீட்சிதர்கள் தரப்பில் மற்றொரு அமர்வில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுமான பணிகளில் விதிமீறல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தரப்பில் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,Hindu Foundation Department ,Chennai High Court ,Chennai ,Hindu Charity Department ,Chidambaram ,Natrajar Temple ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...