×

மதுரை வந்த வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை

 

மதுரை, மார்ச் 4: மதுரையில் நடந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பில், வெளிநாட்டு பறவை இனங்கள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நில மற்றும் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணிகள், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டிற்கான நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இதைதொடர்ந்து நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் வனஉயிரின வனச்சரகர் அருணாச்சல பூபதி தலைமையில், வெள்ளிமலை, வகுத்தமலை, நாகமலை, கிளுவமலை, பெருமாள் மலை, சிறுமலை தெற்கு பகுதி உட்பட 25 இடங்களில், நேற்று பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் ஆர்வலர்கள், வனத்துறை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருடன், வனத்துறை அதிகாரிகள் அடங்கிய 150 பேர் கொண்ட குழுவினர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பின்போது, பறவைகளின் பெயர், இனம் ஆகியவற்றுடன் அவற்றின் வாழ்விடங்களையும் குறிப்பிட வேண்டும். மேலும் அந்த இடத்தில் அவை வாழ்ந்திட அச்சுறுத்தல் ஏதும் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்ட என கணக்கெடுப்பில் பங்கேற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து நடந்த கணக்கெடுப்பில் பல்வேறு வெளிநாட்டு பறவை இனங்களும் மதுரையில் உள்ள பல்வேறு மலைகள் மற்றும் வனப்பகுதிகளுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவற்றின், விபரங்களை சேகரித்த ஆர்வலர்கள் குழுவினர், வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் நிலப்பறவைகளின் ஒட்டுமொத்த விபரம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை வந்த வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,
× RELATED மதுரை மாநகரில் ஆடிக்காற்று...