×

மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். மாமல்லபுரம் கடலில் குளித்த ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நேற்று அலையில் சிக்கினர், அவர்களில் சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஆந்திராவில் உள்ள 2 அரசு கல்லூரிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு இன்று காலை வருகை தந்தனர். மாணவர்கள் 2 குழுவாக பிரிந்து அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

2 குழுவில் ஒரு குழுவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், புராதன சின்னங்களை பார்த்து விட்டு காலை 10 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஜாலியாக நடந்து சென்றனர். கடற்கரையை அடைந்ததும் கடலில் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 10 மாணவர்கள் கடலில் ஆனந்தமாக குளியல் போட்டனர். அப்போது திடீரென ராட்சத அலை எழும்பியது. அடுத்த சில நிமிடங்களில் 10 மாணவர்களையும் கடல் அலை இழுத்து சென்றது. அனைவரும் அலறி துடித்தனர்.

இதை பார்த்ததும் கடற்கரை பகுதியில் அமர்ந்திருந்த சக மாணவர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அவர்களில் சிலர் ஓடி சென்று மாணவர்களை மீட்க முயன்றனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர்களை மீட்க முடியவில்லை. அடுத்த சில விநாடிகளில் 10 மாணவர்களும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மாமல்லபுரம் மீனவர்கள் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கடலோர காவல்படை வீரர்களும் விரைந்து வந்து படகுகளில் சென்று மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு 6 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் விஜய் (18) என்ற மாணவன், சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இறந்த மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

The post மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram sea wave ,Mamallapuram ,Andhra ,Shesha Reddy ,Monish ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...