×

சென்னையில் இருந்து இன்று முதல் குவைத்துக்கு கூடுதல் நேரடி விமான சேவை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குவைத் நாட்டுக்கு நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து குவைத் நாட்டுக்கு இதுவரை ஏர்இந்தியா, இன்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ் மற்றும் ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்கள் தினசரி நேரடி விமான சேவைகளை இயக்கி வருகின்றன. இந்த 4 ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மேலும் ஒரு கூடுதல் நேரடி விமானசேவையை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் இன்று முதல் துவங்கியுள்ளது.

இந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் செவ்வாய், சனிக்கிழமை தவிர, வாரத்தில் 5 நாட்களுக்கு மாலை 6.50 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து கிளம்புகிறது. அன்று நள்ளிரவு குவைத் சென்று அடைகிறது. பின்னர் அங்கிருந்து மறுநாள் அதிகாலை புறப்பட்டு, காலை 6.35 மணியளவில் சென்னை விமானநிலையத்தை வந்தடைகிறது.தற்போது இந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இந்த கூடுதல் நேரடி விமான சேவைக்கு பயணிகளிடையே வரவேற்பை பொறுத்து, விரைவில் தினசரி நேரடி விமான சேவையாக இயக்கப்பட இருப்பதாக ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இனி சென்னையில் இருந்து குவைத்துக்கு நேரடி விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு 5 விமானங்கள் இயக்கப்படுவதால், இச்சேவை மூலம் தொழில், வர்த்தகம் உள்பட பல்வேறு பணிகள் காரணமாக சென்று வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னையில் இருந்து இன்று முதல் குவைத்துக்கு கூடுதல் நேரடி விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuwait ,Chennai Airport ,Air India Express Airlines ,AIRPORT ,Dinakaran ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...