×

ஒருதலைக்காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 3: ஒருதலைக்காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி என்பவர் சென்னையில் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அழகேசன் (26) என்பவர் அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கடந்த 2012 பிப்ரவரி 16ம் தேதி அஸ்வினி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது கழுத்தில் கட்டாய தாலி கட்டவும் அழகேசன் முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த அஸ்வினி, அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், அழகேசனை கைது செய்தனர். ஜாமீனில் வெளியில் வந்த அழகேசன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி கல்லூரியில் இருந்து தனது தோழியுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த அஸ்வினியை கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அஸ்வினியை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

The post ஒருதலைக்காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Special Court for Women ,Ashwini ,Maduravayal, ,Chennai Women's Court ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்