×

2012ம் ஆண்டு 39 உயிர்களை பலி கொண்ட பட்டாசு ஆலையின் வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைப்பு: வெடி விபத்து ஏற்படும் அபாயம்

 

விருதுநகர், மார்ச். 2: தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் அனுப்பி உள்ள மனு வருமாறு: விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியில் உள்ள ஒரு பயர் ஒர்க்ஸில் கடந்த 5.9.2012ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 39 பேர் உயரிழந்தனர். 25 பேர் படுகாயமும், 67 பேர் காயங்களுடன் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்றளவும் துயரத்தில் உள்ளனர். வெடி விபத்திற்கு பின் ஆலையில் இருந்த அபாயகரமான வெடி மருந்து பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட வெடிகள் கன்டெய்னர் லாரிகள் மூலம் அருகில் உள்ள தடங்கம் கிராமத்தில் குடோனில் இருப்பு வைத்தனர்.

பட்டாசு ஆலையில் இருப்பு வைத்த வெடிமருந்துகள், வெடிபொருட்கள் 12 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 12 ஆண்டுகளாக வெடிக்கும் தன்மை உடைய பட்டாசு மருந்துகள், எளிதில் தீப்பற்றக்கூடிய மணி மருந்து மற்றும் இதர வெடிபொருட்கள் அகற்றப்படாமல் ஒரே இடத்தில் இருந்து வருகிறது.குடோன் கட்டிடம் தற்போது பழமை வாய்ந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் சுற்றி புதர்மண்டி, கதவுகள் கரையான், பூச்சிகளால் அரிக்கப்பட்டு உள்ளது. குடோனை சுற்றி கம்பிவேலிகள் இல்லாத நிலையில் கால்நடைகள் உள்ளே செல்ல வழிகள் உள்ளன.

குடோனில் வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகள், பொருட்கள் மீது உராய்வு ஏற்பட்டால் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் தனியார் கேப் ஒர்க்ஸில் உற்பத்தி செய்யப்படும் வெடிபொருட்கள், வெடிகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை குடோன் இல்லாததால் மின்சாரம் உள்ள அறையில் இருப்பு வைத்து வருகின்றனர்.இதுவும் பட்டாசு தொழிற்சாலை விதிகளுக்கு முரணாக உள்ளது.

இதனாலும் வெடிவிபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பயர் ஒர்க்ஸை சுற்றி 700க்கும் அதிகமான குடியிருப்புகள் தடங்கம் கிராமத்தில் உள்ளது. எதிர்பாரா விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பட்டாசு ஆலையின் வெடிபொருட்கள், ரசாயன பொருட்களை தகுந்த பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும். அல்லது செயலிழக்க செய்து விபத்து ஏற்படாமல் மக்கள் பாதுகாப்புடன் வாழ உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post 2012ம் ஆண்டு 39 உயிர்களை பலி கொண்ட பட்டாசு ஆலையின் வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைப்பு: வெடி விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Balamurugan ,Communist Party of India ,Chief Minister of ,Tamil ,Nadu ,Mudalipatty, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...