×

முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து; அண்ணா அறிவாலயத்தில் நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்தார். அங்கு நீண்ட வரிசையில் நின்று அவருக்கு தொண்டர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல், கார்கே, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மனைவி துர்கா, மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். இதை தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு காலை 8.45 மணிக்கு வந்தார். அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். பிறகு கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மெய்யநாதன், சி.வீ.கணேசன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மேயர் பிரியா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் க.சுந்தர், பரந்தாமன், தாயகம் கவி, மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஏ.எம்.வி.பிரபாகரராஜ், ஜோசப் சாமுவேல், ஐயப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம், பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் நினைவிடத்தில், ‘‘உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் மு.க.ஸ்டாலின்” என்ற வாசகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று, கலைஞரின் படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி எம்பி உடனிருந்தார்.

பின்னர் காலை 9.40 மணியளவில் சென்னை அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை மு.க.ஸ்டாலின் வெட்டி கொண்டாடினார். அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பிறந்தநாள் பரிசாக புத்தகம் மற்றும் சால்வை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், துணை தலைவர்கள் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, எஸ்சி-எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மதிமுக பொது செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து வாழ்த்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாகா தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், சுப.வீரபாண்டியன், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் எம்எல்ஏக்கள் பல்லாவரம் கருணாநிதி, வி.ஜி.ராஜேந்திரன், கோவிந்தராஜன், ஜி.செல்வம் எம்பி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், வாகை சந்திரசேகர், திண்டுக்கல் ஐ.லியோனி, இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். தூசி பால்டெக்னிக் கல்லூரி தாளாளர் சசிக்குமார், மாநில சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.எம்.ஜாவீத், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம், சென்னை தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரிதா தங்கம், திமுக நிர்வாகி வீணாஸ்ரீ வி.ஆர்.ரவி, வி.ஆர்.விகாஷ், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கி.வீ.ஆனந்தகுமார், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, சென்னை கிழக்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் துரைகண்ணன், படப்பை மனோகரன், சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினர். முக்கிய சந்திப்புகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஏழை-எளியவர்களுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி வந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,‘‘உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும், பூங்கொத்தும் அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய் ஆகியோர் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

* மாற்றுத்திறனாளிகளை பார்த்ததும் எழுந்து சென்று வாழ்த்து பெற்றார்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் தலைமையில் மாநில பொருளாளர் டாக்டர் எஸ்.நசீம், துணைப்பொதுச்செயலாளர் க.இளங்கோவன், ஆர்.சீனிவாசன் மற்றும் வீர.சரவணன், தர்மலிங்கம், சிவக்குமார், ஜோஸ்வா உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வாழ்த்து தெரிவிக்க அறிவாலயம் வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து சென்று வாழ்த்துகளை பெற்றார். முதல்வரே எழுந்து சென்று அவர்களிடம் வாழ்த்து பெற்றது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. மாற்றுத்திறனாளிகளும் புத்தகங்களை பரிசாக வழங்கினர். இதுகுறித்து ரெ.தங்கம் கூறுகையில்,”முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்” என்றார்.

* மாரியென பொழிந்த வாழ்த்துகள்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ‘‘மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்’’ என கூறியுள்ளார்.

* கட்டுக்கடங்காத கூட்டம்: 3 மணி நேரம் வாழ்த்து பெற்றார் முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9.40 மணிக்கு வாழ்த்துகளை பெற தொடங்கினார். அவருக்கு கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சால்வை, புத்தகம், பூங்கொத்து, பழங்கள், சிற்பங்கள் வழங்கினர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தொண்டர் ஒருவர் ஆடுகளை பரிசாக வழங்கினார். கட்டுங்கடங்காத கூட்டத்தினர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தனர். சுமார் 3 மணிநேரம் தொண்டர்களிடம் அவர் வாழ்த்துகளை பெற்றார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து; அண்ணா அறிவாலயத்தில் நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Anna ,President ,Murmu ,Modi ,Rahul Gandhi ,Ministers ,Anna Vidyalaya ,Chennai ,DMK ,MK Stalin ,Kalyan ,Periyar ,M.K.Stalin ,chief ministers ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...