×

மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? : தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆர்டர்!!

சென்னை: பம்பரம் சின்னம் கோரிய வைகோ வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 முதல் சட்டசபை, மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளது. இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதன்பிறகு கடந்த 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினோம். எனவே, எங்கள் மனுவை பரிசீலித்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், மதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்தனர்.

அப்போது, இந்த வழக்கில், மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பிரிவின் கீழ் பரிசீலிக்க ஆணையிட்ட நீதிபதிகள், மதிமுக பொதுச் செயலாளர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7-க்கு தள்ளிவைத்தது.

The post மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? : தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆர்டர்!! appeared first on Dinakaran.

Tags : Madimuga ,Chennai High Court ,Chennai ,Election Commission ,Wiko ,Court ,General Secretary ,Akkatsi ,Assembly ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...