×

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: 3,302 தேர்வு மையங்கள்; முறைகேடுகளை தடுக்க 4,335 பறக்கும் படைகள்!!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 21,875 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி வரை நடந்தன.

இதையடுத்து, திட்டமிட்டபடி பிளஸ் 2 எழுத்து தேர்வு இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கும். இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் எழுதுகின்றனர். இந்நிலையில்,தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் யாரும் தேர்வுப் பணியில் ஈடுபடக்கூடாது என்று அடிப்படையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் அனைத்து தனியார் பள்ளி தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 154 கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நிலையான பறக்கும் படையில் 1,135 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 43 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடமும், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் அந்தவிடைத்தாள்களை சேகரிக்க 101 மையங்கள் அமைக்கபட்டுள்ளன. பின்னர் தமிழ்நாட்டில் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்றவை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களில் மின் தடை ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: 3,302 தேர்வு மையங்கள்; முறைகேடுகளை தடுக்க 4,335 பறக்கும் படைகள்!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NAGAR ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu ,Puducherry ,Flying ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...