×

கும்பகோணம் அருகே வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 பேர் கைது

 

கும்பகோணம், மார்ச் 1: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் நள்ளிரவில் வைக்கோல் போரை கொளுத்திவிட்டு, தொடரும் என மர்மமான முறையில் எழுதி எச்சரித்துவிட்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் ஒன்றியம், நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது வீட்டின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 120 வைக்கோல் கட்டுகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 25ம் தேதி நள்ளிரவில் கொளுத்தி விட்டு அங்கிருந்த பாத்ரூமில் தொடரும் என மர்மமான முறையில் எழுதி எச்சரித்துவிட்டு சென்றிருந்தனர்.

பின்னர் நள்ளிரவில் கொள்ளைப்புறம் வந்த கலியமூர்த்தியின் குடும்பத்தினர் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இவர்களது வீட்டில் இது நான்காவது முறையாக நடைபெற்றுள்ளதாக அச்சத்துடன் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் தலைமையில் தஞ்சையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரகாஷ் (23) மற்றும் அவரது நண்பர் குமார் மகன் பிரகாஷ் (22) ஆகிய இருவரை பந்தநல்லூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கலியமூர்த்தி நாட்டாண்மையாக உள்ள நிலையில் ஜெயபிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வைக்கோல் போர் எரித்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கும்பகோணம் அருகே வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Bandanallur ,Thanjavur District ,Thiruvidaimarudur Taluk ,Bandanallur Union ,Neigunnam ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...