×

ஓசூரில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், மார்ச் 1: நலவாரியம் மூலம் மருத்துவ இஎஸ்ஐ வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் காந்தி சிலை அருகே, ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சான்பாஷா தலைமை வகித்தார். நகர செயலாளர் சிவராஜ், மாவட்ட பொருளாளர்கள் அரவிந்த், கிருஷ்ணப்பா, பாகலூர் கிருஷ்ணப்பா, நாகராஜ், எல்லப்பா, மும்தாஜ் முன்னிலை வகித்தனர். நலவாரியம் மூலம் மருத்துவ இஎஸ்ஐ வசதி, காப்பீடு, பிஎப் பலன்கள் வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு மற்றும் உலக தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதலின்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயது, ஆண்களுக்கு 60 வயது நிறைவடைந்த தேதியில் இருந்து ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன், சங்கரய்யா, ஆதில், நூரு, சின்னசாமி, முபாரக், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post ஓசூரில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIDUC ,Hosur ,ESI ,AITUC Building Workers Union ,Hosur Gandhi ,District Deputy Chairman… ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு