×

கேரளாவில் வெப்பநிலை அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து இன்றும், நாளையும் 2 மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கோடைகாலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து உள்ளது.

கேரளாவில் வழக்கமாக மழைக்குத்தான் மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக வெயிலுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்றும், நாளையும் இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களிலும் வெப்பநிலை வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியசுக்கு மேலும், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியசுக்கு மேலும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 36 டிகிரி செல்சியசுக்கு மேலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

The post கேரளாவில் வெப்பநிலை அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Pikki ,Wayanadu ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது