×

கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு பெண் வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி: உருட்டு கட்டைகளுடன் மர்ம கும்பலை தேடிய கிராம மக்கள்

கூடுவாஞ்சேரி, பிப்.29: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்களில் 7000க்கும் மேற்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் 250க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பெண் வேடத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் விநாயகபுரம் 3வது தெருவில் உள்ள மாரியம்மாள், சரவணன் தம்பதியினர் வீட்டில் கதவைத் திறந்து குழந்தைகளை தூக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென கண் விழித்த தம்பதியினர் அலறி கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தது இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் விசாரித்தனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், காலை 11 மணியிலிருந்து மாலை வரை ஒரு புல்லட்டில் வட மாநிலத்தை சேர்ந்த 3 மர்ம ஆசாமிகள் விநாயகபுரம் பகுதியை சுற்றி சுற்றி நோட்டமிட்டபடி வலம் வந்தனர். பின்னர், அதே புல்லட்டில் 3 நபர்களில் ஒருவர் பெண் வேடத்தில் தலை நிறைய பூ வைத்தபடி வந்துள்ளனர். இதில், திரும்பி செல்லும்போது அந்த புல்லட்டில் இரண்டு நபர்கள் மட்டுமே சென்றுள்ளனர். இதில், பெண் வேடத்தில் வந்த மர்ம ஆசாமி திடீரென மாயமானார். இதில் யாரோ உறவினர் வீடுகளுக்கு வந்து விட்டு செல்கின்றன என்று நாங்கள் இருந்து விட்டோம். இதனை அடுத்து பெண் வேடத்தில் வந்த மர்ம ஆசாமி இரவு 11.30 மணி அளவில் மாரியம்மாள், சரவணன் தம்பதியினர் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்க முயன்றுள்ளார். இதில் பொதுமக்கள் திரண்டு வருவதை கண்டதும் மர்ம ஆசாமி அடர்ந்த முட்புதர் பகுதி வழியாக தப்பித்து ஓடிவிட்டார். மேலும் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அருங்கால் கிராமம் கூடுவாஞ்சேரி காவல் நிலைய கட்டுப்பாட்டிலும், கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் ஆகிய கிராமங்கள் காயார் காவல் நிலைய கட்டுப்பாட்டிலும் உள்ளன.

இதில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையம் 9 கிலோ மீட்டர் அருகிலேயே உள்ளது. ஆனால் காயார் காவல் நிலையம் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காயார் காவல் நிலையத்துக்கு சென்று எஸ்ஐயிடம் புகார் கொடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டரிடம் சென்று புகார் கொடுக்க வேண்டும் என்றால் இன்னும் கூடுதலாக 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். டிஎஸ்பியிடம் சென்று புகார் கொடுக்க வேண்டும் என்றால் இன்னும் கூடுதலாக 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதில், மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதில் பேருந்து வசதியும் இல்லை இடையில் காட்டுப்பகுதியாகும். இதில் ஏதாவது அவசர ஆபத்து பொதுமக்களுக்கு பிரச்னை என்றால் கா யார் போலீசுக்கு தகவல் கொடுத்தாலே இரண்டு மணி நேரம் கழித்துதான் வருகின்றனர். இதில் வெகுதூரம் என்பதால் வந்து செல்வதற்கு போலீசாருக்கும் சிரமமாக உள்ளது. எனவே, கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் ஆகிய கிராமங்களில் சேர்க்க தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை, மேலகோட்டையூர்-கல்வாய் சாலை ஆகிய 3 சாலைகளுக்கும் இடையே கீரப்பாக்கம் ஊராட்சி உள்ளது. மேலும், கீரப்பாக்கம் ஊராட்சியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகள் சந்து பொந்தெல்லாம் புகுந்து தப்பித்து செல்கின்றனர். இதில் கீரப்பாக்கம் ஊராட்சியை ஒட்டியபடி நல்லம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, கீரப்பாக்கம் ஊராட்சி முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு பெண் வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி: உருட்டு கட்டைகளுடன் மர்ம கும்பலை தேடிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Guduvancheri ,Keerpakkam ,Murugamangalam ,Arungal ,Katangolathur ,Chengalpattu ,Panchayat ,Dinakaran ,
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...