×

மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்து கொள்முதல் செய்ய டெண்டர்

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றால் நாளுக்கு நாள் பொது போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.

சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை போக்குவதற்காக கூடுதல் பேருந்துகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, புதிதாக மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துக்கு கழகம் திட்டமிட்டது. அந்த வகையில், முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளுக்கு ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 500 மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகரிகள் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது 3,436 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

அதில் 400 சாதரண பேருந்துகள், 100 குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்க உள்ளோம். பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகளை கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், மின்சார பேருந்துகள் இயக்கம், பராமரிப்பு பணி மேற்கொள்ள தகுதியான நிறுவனங்கள் டெண்டர் கோர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்து கொள்முதல் செய்ய டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் 200, 100 நோட்டை சிதறவிட்டு...