×

மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

ஆவடி: ஆவடி அடுத்த வேல்டெக் சீனிவாசா நகர் பகுதியில் வசித்து வருபவர் வளர்த்தீஸ்வரன் (26). இவரது மனைவி பெயர் கார்த்திகா. வளர்த்தீஸ்வரனுடன் அவரது தந்தை வேலாயுதம், தாய் பொன்னழகு ஆகியோரும் வசித்து வந்துள்ளனர். இதில் கார்த்திகா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் மனைவி கார்த்திகாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை பரமக்குடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வளர்த்தீஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். கடந்த 4 மாதங்களாக வேலையில்லாமல் இருந்த வளர்த்தீஸ்வரன், தனக்கு வாகனம் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சீனிவாசா நகர் அருகில் உள்ள வெள்ளானூர் ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு, வளர்த்தீஸ்வரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பழனிவேல் ஆகிய இருவரும் பைக்கில் ஏரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் அங்கு மது அருந்தியதாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த வளர்த்தீஸ்வரன் ஏரியின் ஆழமான பகுதியில் மற்றொருவர் மீன் பிடிப்பதைக் கண்டு, ஆர்வக்கோளாறில் ஏரிக்குள் தாவிக் குதித்து ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடன் இருந்த பழனிவேலிடம், தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறியபடி தண்ணீருக்குள் வளர்த்தீஸ்வரன் சென்றுள்ளார். பின்னர் ஏரியில் குதித்த அவர், மீண்டும் வெளியே வர முடியாதபடி சேற்றில் சிக்கி, தண்ணீரில் மூழ்கினார். உடனே பழனிவேல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு வந்த டி7 டேங்க் பேக்டரி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கொடிராஜ் மற்றும் காவலர்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த ஆவடி காவல் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வளர்த்தீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றினர். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் வளர்த்தீஸ்வரனுடன் இருந்த பழனிவேலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Avadi ,Varkatheeswaran ,Veltech Srinivasa Nagar ,Karthika ,Velayutham ,Ponnazhaku ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!