×

சின்னதாராபுரம் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

க.பரமத்தி, பிப்.27: ககரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஊராட்சி கொங்குசெல்வநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி மகன் பிரவீன்(39). கரூரில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலாவாணி. இவரும் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் தற்போது, கரூரில் கருப்பகவுண்டன்புதூர் அருகே பாலாஜி நகரில் வசித்து வருகின்றனர். வாரம் ஒருமுறை குடும்பத்துடன் சொந்த ஊரான சின்னதாராபுரத்திற்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 18ம்தேதி வந்து விட்டு வீட்டைப் பூட்டி விட்டு கரூர் சென்றனர். பிறகு 24ம்தேதி மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த மோதிரம், தங்கசெயின், வலையல்கள் என மொத்தம் 15 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். அதிர்ச்சியடைந்த அவர் சின்னதாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து திருட்டு நடந்த வீட்டை கரூர் டிஎஸ்பி அப்துல்கபூர், சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்ஐ சந்திரசேகரன் ஆகியோர் வீட்டை பார்வையிட்டனர். பிறகு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வங்கி மேலாளர்கள் 15 பவுன் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சின்னதாராபுரம் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chinnadharapuram ,Paramathi ,Gopalswamy ,Praveen ,Konguselvanagar ,Chinnadharapuram panchayat ,Kakarur district ,Karur ,Kogilavani ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்