×

மதுரைக்கு பிரதமர் வருகையால் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: பார்வையாளர்கள் நுழைய தடை

 

அவனியாபுரம், பிப்.27: பிரதமர் மோடி மதுரை வருகையால் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரையில் இன்று நடைபெறும் தனியார் பள்ளி விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெயராமன் தலைமையில் தென்மண்டல காவல் துறை தலைவர் நரேந்திர நாயர், மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் 4 காவல் கண்காணிப்பாளர்கள் 25 துணை கண்காணிப்பாளர்கள், 80 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையம், பெருங்குடி, மதுரை சுற்று வட்ட சாலை, கருப்பாயூரணி வீரபாஞ்சான், கப்பலூர், தனக்கன்குளம், திருநகர், பசுமலை பழங்காநத்தம் உள்ளிட்ட இடங்கள் வழியாக பிரதமர் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், அதிரடிப்படை வீரர்கள் குழு என அனைத்து நிலையிலும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. விமான நிலைய உள் வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மதுரைக்கு பிரதமர் வருகையால் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: பார்வையாளர்கள் நுழைய தடை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Avaniyapuram ,Modi ,Dinakaran ,
× RELATED மதுரை வலையங்குளத்தில் மெகா சமபந்தி விருந்து