×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றியது!

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து நிர்ணயித்த 192 ரன்களை 5 விக்கெட் இழப்புக்கு 61 ஓவர்களில் இந்தியா எட்டியது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஹதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி பதிலடி கொடுத்தது.

இரு அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. தொடரில் நீடிக்க 4வது டெஸ்ட் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் ஜுரேல் 90 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவற விட்டார்.

46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 192 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. தொடரின் கடைசி போட்டி மார்ச் 07ம் தேதி தர்மசாலா மைதானத்தில் தொடங்குகிறது. ‘BazBall Style’ கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அன்னிக்கே அதே ஸ்டைலில் இந்திய அணி திருப்பி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றியது! appeared first on Dinakaran.

Tags : England ,Ranchi ,India ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது