×

பாஜக ஆட்சி மக்களுக்கு செய்த அநியாயங்கள் குறித்து மார்ச் முதல் வாரத்தில் துண்டு பிரசுரம் மூலம் பரப்புரை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்து ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருகிறது. தவறான சமூகப் பொருளாதார கொள்கை காரணமாக மிகப்பெரிய பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் நிலவரப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 172 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவிகிதம். ஆனால், 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் நமது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது பெறப்பட்ட மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி மட்டும் தான்.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பா.ஜ.க. பெற்ற மொத்த கடன் 117 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை செய்ததால் கடுமையான பொருளாதார பேரழிவை நாடு தற்போது சந்தித்து வருகிறது. கடந்த ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1839 சதவிகிதமும், அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் மத்தியில் முதல் இடத்தை பெறுவதற்கு அதானியும், அம்பானியும் மோடி ஆட்சியின் தயவால் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி ஆட்சியில் பலனடைந்த கார்ப்பரேட் பெருமுதலாளிகள் கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 2018 முதல் 2023 ஆண்டு வரை பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 12 ஆயிரத்து 8 கோடி. இதில் பா.ஜ.க. பெற்ற மொத்த நன்கொடை 6564 கோடி ரூபாய்.

இது மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம். இத்திட்டத்தின் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் மார்ச் 13ம் தேதி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படி வெளியிடப்படும் போது பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்த கார்ப்பரேட்டுகள் யார் என்பது அம்பலமாகும். அப்போது மோடியின் புனிதர் என்கின்ற முகத்திரை கிழித்தெறியப்படும். அகில இந்திய காங்கிரஸ் சமீபத்தில் 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத அநியாயங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

அதன் அடிப்படையில் துண்டு பிரசுரம் தயாரிக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாபெரும் பரப்புரை இயக்கத்தை மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறது. இதன்மூலம் 10 ஆண்டு மோடி ஆட்சியின் அவலங்களை காங்கிரஸ் கட்சியினர் கிராமம் கிராமமாக, வீடு வீடாக கையில் காங்கிரஸ் கொடிகளை ஏந்திக் கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிரமான பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜக ஆட்சி மக்களுக்கு செய்த அநியாயங்கள் குறித்து மார்ச் முதல் வாரத்தில் துண்டு பிரசுரம் மூலம் பரப்புரை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Tamil Nadu Congress Committee ,J. K. ,Dinakaran ,
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...