×

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.02.2024) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.02.2024) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

26.02.2024 மற்றும் 27.02.2024ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28.02.2024 மற்றும் 02.03.2024ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 25.02.2024 மற்றும் 26.02.2024ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 26.02.2024ம் தேதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தென் தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Chennai ,southern Indian ,Meteorological Centre ,
× RELATED மதுரை மாநகரில் ஆடிக்காற்று...