×

திண்டுக்கல் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்தவர் கைது: தப்பிய 2 பேருக்கு வலை

 

திண்டுக்கல், பிப். 25: திண்டுக்கல் அருகே லாரி டிரைவரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்தவரை கைது செய்த போலீசார், தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (34). லாரி டிரைவர். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பர்னிச்சர் பொருட்களை ஏற்றி கொண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று மதுரை- திண்டுக்கல் பைபாஸ் வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல் தோமையார்புரம் அருகே வந்த போது லாரியை நிறுத்திவிட்டு ராஜ்குமார் ஓய்வு எடுத்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் ராஜ்குமாரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு, ரொக்க பணம் ரூ 5000 ஆகியவற்றை பறித்து கொண்டு டூவீலரில் தப்பி சென்றனர். இதையடுத்து ராஜ்குமார் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் டூவீலரில் தப்பி சென்ற நபர்களை விரட்டி சென்றனர். அப்போது டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த நபரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மற்ற 2 பேரும் டூவீலரில் தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பேகம்பூரை சேர்ந்த முகமது சித்திக் (24) என்பதும் தப்பியவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிலால் (26), ரகுமான் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது சித்திக்கை கைது செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்தவர் கைது: தப்பிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Rajkumar ,Pethanayakkanpalayam, Salem district ,Tirupur ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்