×

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமானதால் போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக 2023 மார்ச் 20ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு நின்றிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த கிராண்ட் விக்டர் இகேனா என்பவரிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் 59 கிராம் விலை உயர்ந்த போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், கிராண்ட் விக்டர் இகேனாவை கைது செய்து அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைபொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், கைது செய்யப்பட்டு 180 நாட்கள் ஆன நிலையில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தனக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராண்ட் விக்டர் இகேனா சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரவீன்நாத் ஆஜராகி, மனுதாரர் கைது செய்யப்பட்டு 180 நாட்கள் ஆன நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், அவருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரதாப் ஆஜராகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்கில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குற்றம்சாட்டப்பட்டவர் சட்டப்பூர்வமான ஜாமீன் கோர முடியும். இந்த வழக்கில் 184 நாட்கள் முடிந்த நிலையில் மனுதாரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் 180 நாட்களுக்கு முன்பே குற்றப்பத்திரிகை தாக்கல் ெசய்ய அவகாசம் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் 180 நாட்கள் ஆவதற்கு முன்பே விசாரித்து முடிவெடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்யாமல் இரு மனுக்களையும் தாமதமாக விசாரித்து விசாரணை நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது தொடர்பாக விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு நோட்டீசும் அனுப்பவில்லை. அரசு தரப்புக்கு வாய்ப்பு தருவதற்காக குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேண்டுமென்றே தள்ளிவைக்க கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கிலும் இதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் கோர உரிமை உள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

 

The post குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமானதால் போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Chennai High Court ,Chennai Central Railway Station ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...