×

நெம்மேலியில் ரூ.1516 கோடியில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெம்மேலியில் ரூ.1516 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்பட ரூ.2465 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.1802.36 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பி தரும் அடிப்படையில் மீஞ்சூரில் தினசரி 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கடந்த 2007 பிப்.25ம் தேதி தற்போதைய முதல்வரும், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் கடந்த 2010 ஜூலை 31ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து, நெம்மேலியில் தினசரி 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய திட்டப் பணிகளை அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கேற்ப சீரான குடிநீர் வழங்கும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை பேரூரில் தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்தாண்டு ஆக.21ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்நிலையில், நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பகுதிக்கான விரிவான குடிநீர் வழங்கல் திட்டம், பெருங்குடி மண்டலம், எல்.பி.சாலை கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை உந்துகுழாய்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் வார்ப்பிரும்பு உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள், குன்றத்தூரில் நாளொன்றுக்கு 0.8 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாற்றுமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாற்று சாலையோர கழிவுநீரேற்று நிலையம்; பெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8.5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.129.50 கோடி செலவில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், திருவள்ளூர், திருத்தணி நகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.217.13 கோடி செலவில், 20.72 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையிலும், 2 லட்சத்து 16 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டங்கள் என மொத்தம் ரூ.533 கோடியே 11 லட்சம் செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.50.05 கோடியில் 2 வணிக வளாகங்கள், திருவள்ளூர் நகராட்சி, ரூ.4.64 கோடி செலவில் திருநின்றவூர் நகராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் புகழூர் நகராட்சியில் புதிய மேம்படுத்தப்பட்ட சந்தைகள், கூடுதல் அலுவலகக் கட்டிடம், மறைமலைநகர் நகராட்சியில் பொது சுகாதார கழிப்பிடங்கள்; மேம்படுத்தப்பட்ட நீர்நிலைகள்; தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள் உள்பட மொத்தம் ரூ.172 கோடியே 34 லட்சம் செலவில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் முடிவுற்ற 52 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய நகர்ப்புற சுகாதாரப் பணியின் கீழ், ரூ.4.95 கோடி செலவில் அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டு-ஜெகநாதபுரத்திலும், ரூ.4.93 கோடி செலவில் தேனாம்பேட்டை மண்டலம், பெரியார் நகர்-ஷர்புதீன் தெருவிலும் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரிப்பன் கட்டிட வளாகத்தில் சீர்மிகு ஆளுமைக் கட்டிடம் மற்றும் கட்டளை மையம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரிப்பன் கட்டிட வளாகத்திற்குள் 4,705 ச.மீ. பரப்பளவில் ரூ.57.76 கோடி செலவில், 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், பேரிடர் மேலாண்மை மையம், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் புவியியல் தகவல் அமைப்புத் துறை சிறப்பு திட்டங்கள் துறைக்கான அலுவலகம், கூட்டரங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி, அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள சீர்மிகு ஆளுமைக் கட்டிடம் மற்றும் கட்டளை மையம்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலம்- சுனாமி குடியிருப்புப் பகுதி, திரு.வி.க.நகர் மண்டலம் – ஏ.கே. சுவாமி முதல் தெரு, பெருங்குடி மண்டலம் – செட்டிநாடு என்கிளேவ், ஜல்லடியன்பேட்டை, கிருஷ்ணா நகர்-3வது குறுக்குத் தெரு மற்றும் முத்து நகர் ஆகிய பகுதிகளில் 1.94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய பூங்காக்கள். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம்-சுப்பிரமணியம் சாலை மற்றும் பள்ளிக்கரணை, காமகோட்டி நகர்-6வது தெரு ஆகியவற்றில் ரூ.1.21 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 விளையாட்டுத் திடல்கள் என மொத்தம் ரூ.70 கோடியே 79 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கு 6 நாய் பிடிக்கும் வாகனங்கள், கால்நடைகளைப் பிடிக்க 5 கால்நடை பிடிக்கும் வாகனங்கள், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் 3 மரக்கிளை நீக்கும் இயந்திரங்கள், வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் 350 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் ரூ.9.56 கோடி மதிப்பிலான 364 வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

ஒட்டுமொத்தமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 2465 கோடி செலவில் 96 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதவிர, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பையை ரூ.648.38 கோடி செலவில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னை ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் பிரதான கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் பணிகள், கொளத்தூர் வார்டு-62 கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, நாவலர் நகர் கழிவுநீரிறைக்கும் நிலையத்திற்கு அனுப்ப பிரதான உந்து குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் மேற்கு கூவம் ஆற்றின் கரையில் சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைத்தல், பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் ரூ.101.26 கோடியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 3 புதிய திட்டப் பணிகளுக்கும், தாம்பரம் மாநகராட்சி மற்றும் கொமாரப்பாளையம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.813 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் 23 புதிய திட்டப் பணிகளுக்கும், செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.237.43 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் என மொத்தம் ரூ.238 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள் செல்வம், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், பாபு, அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நெம்மேலியில் ரூ.1516 கோடியில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nemmeli ,Phalvar ,Mu K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Dinakaran ,
× RELATED பக்தர்கள் போற்றும் அரசாகவும்,...