×

பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது உக்ரைன் – ரஷ்யா போர்: 15,783 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

மாஸ்கோ: கடந்த 2 ஆண்டாக நடக்கும் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், தற்போது 3வது ஆண்டில் கால்பதித்துள்ளது. பல லட்சம் பேர் பலியான நிலையில், 15,783 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவையும், நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்த அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் படையெடுத்து 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தற்போது 3வது ஆண்டில் கால்பதித்த நிலையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கின.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 500க்கும் மேற்பட்ட புதிய தடைகளை அறிவித்தார். ரஷ்ய ஆயுதத் தொழிலுக்கு உதவி செய்யும் 50 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தது. ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைனில் இதுவரை பொதுமக்கள் 10,582 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 19,875 பேர் காயமடைந்தனர். சுமார் 35,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்ய தரப்பில் 44,654 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக போராடும் கூலிப்படையான வாக்னர் படையில் அங்கம் வகித்தவர்களில் 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 24 வெளிநாடுகளைச் சேர்ந்த 192 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவரும் ஒருவர். சுமார் 60 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வந்தனர். 80 லட்சம் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. உக்ரைனின் 4.38 கோடி மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பெண்கள் மற்றும் குழந்தைகள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய அரசின் தகவலின்படி 15,783 இந்திய மாணவர்கள், உக்ரைன் – ரஷ்யப் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது உக்ரைன் – ரஷ்யா போர்: 15,783 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Ukraine-Russia war ,Moscow ,Ukraine ,Russia ,United States ,United Kingdom ,
× RELATED ரஷ்யா இசை கச்சேரியில் துப்பாக்கிச்சூடு: 133 பேர் பலி.! உக்ரைனுக்கு தொடர்பு