×

உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.294,83 கோடி மதிப்பீட்டில் 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டிகள் ரூபாய் 294.83 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

1. ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி, அதன் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்குவது ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுவது உயிர் நீர் இயக்கத்தின் (Jal Jeevan Mission) நோக்கமாகும்.

2. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள 125.28 இவட்சம் வீடுகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 99.00 இலட்சம் வீடுகளுக்கு (79.03%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 5,578 கிராம ஊராட்சிகளுக்கு 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

3. காஞ்சிபுரம். இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்கள் வீடுதோறும் குடிநீர் வழங்கும் மாவட்டங்கள் என சான்றளிக்கப்பட்டுள்ளன.

4. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ள 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நீடித்த நிலைத் தன்மையுடைய நீராதாரத்தைக் கொண்டுள்ள கிராமங்களில் ஒற்றைக் கிராமத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ரூ.18,228.38 கோடி மதிப்பீட்டில் நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

5. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் நிதிப் பங்களிப்புடன் ரூபாய் 294,83 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1.674 புதிய மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் அரசின் நோக்கத்தினை அடைவதில் இத்திட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

The post உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.294,83 கோடி மதிப்பீட்டில் 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Bio-Water Movement ,K. Stalin ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...