×

வடநெம்மேலி பாம்பு பண்ணையில் செங்கை கலெக்டர் திடீர் ஆய்வு

மாமல்லபுரம், பிப்.23: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையொட்டி அமைந்துள்ள முதலை பண்ணை வளாகத்திற்குள் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், தமிழக அரசிடம் அனுமதி பெற்று ஆண்டுதோறும் பாம்புகளை பிடித்து இப்பண்ணைக்கு வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பாம்புகளை பிடிக்கின்றனர். மேலும், பிடித்து வந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பின்னர் ஒவ்வொரு பாம்பிலிருந்தும் விஷம் எடுக்கப்படுகிறது. அப்படி, எடுக்கப்படும் விஷம் அங்குள்ள ஆய்வகத்தில் பவுடராக்கி, அதனை மும்பை, புனே, ஐதராபாத் பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கேன்சர், புற்றுநோய், ரத்த கசிவு நிற்க, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பாம்பு, பிடித்து வந்து கொடுக்கும் இருளர்களுக்கு நல்ல பாம்புக்கு ₹2,300, கண்ணாடி வீரியன் ₹2,300, கட்டு வீரியன் ₹850, சுருட்டை வீரியனுக்கு ₹300 என பணம் வழங்கப்படுகிறது. விஷம், எடுத்த பின்பு 28 நாட்கள் கழித்து பாம்புகள் எங்கு பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் வனத்துறையினர் அனுமதியோடு மீண்டும் விடப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பாம்பு பண்ணையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள, பாம்பு பிடி தொழிலாளர்களிடம் ஆண்டுதோறும் எத்தனை பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பிடித்து வந்து கொடுக்கும் பாம்புகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது. உங்களுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதா? குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளதா? என கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது, பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் உரிமம், சாதி சான்று ஆகியவற்றை விரைந்து வழங்க வேண்டும். பாம்பு பிடிக்க செல்லும் போதும், பிடித்து விட்டு திரும்பி வரும்போதும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க கூடாது என கலெக்டர் அருண்ராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதுகுறித்து, மற்ற அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

The post வடநெம்மேலி பாம்பு பண்ணையில் செங்கை கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Senkai Collector ,Vadanemmeli ,Mamallapuram ,Irular Snake Catchers Cooperative Society ,Vadanemmeli East Coast Road ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,snake ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...