×

ஆட்டிசம் குழந்தைகளின் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம்

நன்றி குங்குமம் தோழி

‘எனக்குப் பிறகு என் குழந்தையை யார் காப்பாற்றுவார்’ என்பதே ஆட்டிசம் குழந்தை பெற்றோர்களது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு தீர்வைத்தரும் விதமாக, இந்தக் குழந்தைகளை இணைத்து ஹைட்ரோபோனிக்ஸ் ஃபார்மிங் (Hydroponics farming) என்கின்ற, நிலமற்ற விவசாயத்தை செய்து வருகிறார், கோவை விஷ்ணுகிராந்தி அமைப்பை தொடங்கி இயக்கி வரும் மருத்துவர் பானுமதி. ‘‘விஷ்ணுகிராந்தி என்பது மூளைத் தொடர்பான பிரச்னைகளுக்கான மருத்துவ குணம் நிறைந்த மூலிகை மரம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெயரில் அமைப்பை நான் தொடங்கியபோது, ஆட்டிசம் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களால் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது’’ என்றவாறே பேச ஆரம்பித்தார் மருத்துவரான பானுமதி.

‘‘கோவை மாவட்டம் இடையர்பாளையத்தில் டிஸ்லக்ஸியா (dyslexia) மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான தெரபிகளுடன் தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிற தெரபி சென்டர்தான் விஷ்ணுகிராந்தி. இங்கு பிஹேவியரல் தெரபி, ஸ்பீச் தெரபி, காக்னிசென்ட் தெரபி, க்ராஸ் மோட்டார் ஃபைன் மோட்டார் என்கிற ஆக்குபேஷனல் தெரபி, பிஸியோ தெரபி போன்ற தெரபிகள் ஆட்டிசம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் குழந்தைகளை எங்களால் சரியாக அடையாளம் காண முடியும்’’ என்றவர், ‘‘இது ஒரு குறைபாடுதான். பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகள் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்தால், இவர்களையும் நார்மல் நிலைக்குக் கொண்டுவரலாம்’’ என அழுத்தமாகவே நம்பிக்கையை விதைக்கிறார் மருத்துவர்.‘‘ஆட்டிசத்தில் மைல்ட், மாடரேட், சிவியர் என மூன்று நிலைகள் உண்டு. இதனை இரண்டு முதல் மூன்று வயதுக்குள்ளாகவே பெற்றோர் கண்டுபிடித்து, தெரபி கொடுக்க உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை Catching them early என்போம். அப்போதுதான் ஆட்டிசத்தில் இருந்து விரைவாக குழந்தையை மீட்டெடுக்க முடியும்.

குழந்தை பிறந்த 6 மாதத்தில் இருந்தே ஒவ்வொரு மைல்ஸ்டோனாக் கடக்க ஆரம்பிக்கும். பெற்றோர் அப்போதிலிருந்தே தனது குழந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்க வேண்டும். மூன்று முதல் நான்கு மாதம் தொடங்கி குழந்தை குப்புற விழ வேண்டும். தன்னைச் சுற்றி கேட்கும் சத்தங்களுக்கு செவி சாய்த்து, திரும்பிப் பார்க்க வேண்டும்(response). தரையில் கிடக்கும் பொருட்களை அது தூசியாக இருந்தாலும் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

நமது கண்களை குழந்தை நேராகப் பார்க்கிறதா என கவனிக்க வேண்டும். இதில் ஆட்டிசம் குறைபாட்டில் பிறந்த குழந்தையின் வளர்ச்சி இயல்பாய் இருக்காது. இவற்றில் ஏதேனும் குறை அல்லது வித்தியாசங்கள் பெற்றோருக்குத் தெரிந்தால் உடனடியாக டெவலப்மென்டல் பீடியாட்ரிஷியனை (developmental pediatrician) அணுக வேண்டும். குழந்தையின் ஒவ்வொரு மைல் ஸ்டோனையும் அளந்து, உற்றுநோக்கி பிரச்னை என்ன என்பதை குழந்தை மருத்துவர் தெளிவாகச் சொல்லிவிடுவார்.

ஆட்டிசம் குழந்தைகளின் உலகம் வேறு. அவர்களின் உலகத்தில் இருந்து, நமது உலகத்திற்குள் அவர்களைக் கொண்டுவர, அவர்கள் கவனத்தை நமது பக்கம் திருப்பி, நாம் சொல்வதை கேட்கவைக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதுதான் இதில் மிகமிக முக்கியமான வேலை. ஆரம்பக் கட்டத்திலே இதனைச் செய்துவிட்டால் குழந்தையை கட்டுப்படுத்துதல் சுலபம். கவனிக்கப்படாமலே மூன்று நான்கு வயதைக் குழந்தை கடந்துவிட்டால் சொல்வதைக் கேட்க வைப்பது ரொம்ப ரொம்ப கடினம்.

மிக விரைவில் கண்டுபிடித்து தெரபிகளைக் கொடுப்பதன் மூலம், மூன்றே வாரத்தில் குழந்தையின் பிகேவியரில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நம் முகம் பார்த்து பேச வைத்துவிட முடியும். நமது கட்டுப்பாட்டிற்குள் அவர்களைக் கொண்டுவந்துவிடலாம். ஆரம்பக் கட்டத்திலே கண்டுபிடித்ததன் மூலமாக இதுவரை 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை முழுமையாகவே நாங்கள் குணப்படுத்தியிருக்கிறோம். இயல்பான குழந்தைகளைப்போல அவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் சிவியர் ஆட்டிசம் எனச் சொல்லப்படும் ஒரு குழந்தைகூட இருக்கக் கூடாது என்பதே எனது லட்சியம்’’ என்கிறார் நம்பிக்கையை விதைத்தபடி.

‘‘தன் குழந்தைக்கு இருப்பது ஆட்டிசம் என்பதைக் காலம் கடந்து கண்டுபிடித்து, பெற்றோர்களால் கவனிக்கப்படாமலே விடப்பட்ட, 15 வயதைக் கடந்த, ஆட்டிசம் குழந்தைகளை ஹைட்ரோபோனிக் விவசாயத்தில் விஷ்ணுகிராந்தி அமைப்பில் ஈடுபடுத்துகிறார்கள். இது மாதிரியான குழந்தைகளுக்கு பிரச்னைகளைக் கொடுக்காத, எளிமையான தொழில்களைக் கண்டறிந்து ஈடுபடுத்தினால் வருமானம் ஈட்ட அவர்களாலும் முடியும்.

முழுமையான விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாகக் கையாள வேண்டும். ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தில் இந்தப் பிரச்னைகள் இல்லை. புழு பூச்சி, களை, மணல் போன்ற பிரச்னை இந்த விவசாய முறையில் இருக்காது.ஆட்டிசம் குழந்தைகளை வைத்து பிளாஸ்டிக் குமிழிகளில் தேங்காய் நார்களை அடைப்பது, விதை போடுதல், தண்ணீர் மாற்றுதல் போன்ற எளிமையான, சின்னச் சின்ன வேலைகளை செய்ய வைக்கிறோம். இவர்கள் மூலமாகவே பல்வேறு வகையான கீரைகள், காய்கறிகள், சாலட் செய்யத் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது.

இதில் வரும் வருமானம் இவர்களது வாழ்வாதாரத்திற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. பெற்றோர்களின் இறப்பிற்கு பிறகு கண்டிப்பாக இது அவர்களுக்கு கை கொடுக்கும்’’ என்கிறார் மருத்துவர்.‘‘மிகச் சமீபத்தில் இந்தக் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்காக கொரியா நாட்டின் அழைப்பின் பேரில் சென்று வந்தேன். இவர்களுக்காகவே சில செயலிகளை அவர்கள் வடிவமைத்துஇருக்கிறார்கள். செயலியில் சில மாற்றங்களை சொல்லியிருக்கிறேன். மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் கண்டிப்பாக இந்தக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றவர், ஏப்ரல் 2 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் என்பதையும் நமக்கு நினைவூட்டி விடை கொடுத்தார்.

மருத்துவர் பானுமதி

மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் முடித்து முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன், உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். கூடவே மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்திருக்கிறார்.20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் விஷ்ணுகிராந்தி அமைப்பின் இயக்குநராகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துகொண்டே, டிஸ்லக்ஸியா மற்றும் ஆட்டிசம் குழந்தைகளின் மாற்றத்திற்காக பல்வேறு வழிகாட்டுதல்களையும், முன்னெடுப்புகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஹைட்ரோபோனிக்ஸ் ஃபார்மிங்…

சுருக்கமாக இது மண் இல்லாத விவசாயம். பெரிய அளவில் இடவசதி இதற்குத் தேவைப்படாது. பராமரிப்பதும் சுலபம். பிவிசி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, வட்ட வடிவ துளைகளை இட்டு, அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைத்து செடி நிற்க ஒருவிதமான களிமண் உருண்டைகள் அல்லது தேங்காய் நார்களை உருட்டி உள்ளே போட வேண்டும். இந்த உருண்டைகள் நீரில் கரையாது. ஆனால் நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

இந்த உருண்டைகளுக்குள் இடப்பட்ட விதைகள் வழியாக செடிகள் வளர்ந்து, காற்று நிறைந்த பிவிசி பைப்புகளுக்குள், ஏரோபிக்ஸ் முறையில் செடிகள் மிதந்தபடியே இருக்கும். செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக காற்று மற்றும் நீர் வழங்கப்படுகிறது. செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நீருடன் கலந்து செலுத்தப்படும். இதிலிருந்து வெளியேறும் நீர் மறுசுழற்சியாகி மீண்டும் செடிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. இந்த விவசாய முறையில் களைகள் வளராது. மிகக் குறைந்த நாட்களிலே காய்த்து அறுவடைக்கு செடிகள் தயாராகும். ஆண்டு முழுவதும் எல்லா வகையான காய்கறிகள், கீரைகள், பழங்களை ரசாயனக் கலப்பின்றி பலமடங்கு உற்பத்தி செய்ய இந்த முறை மிகவும் சிறந்தது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post ஆட்டிசம் குழந்தைகளின் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் appeared first on Dinakaran.

Tags : kumkum ,
× RELATED கறுப்பு உலர் திராட்சையின் நன்மைகள்!