×

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

பள்ளிப்பட்டு, பிப். 22: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நேற்று காலை முதல் மாவட்ட கலெக்டர் பல்வேறு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அத்திமாஞ்சேரி பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகள், வெளிப்புற நோயாளிகளின் வார்டுகளில் வசதிகள், மருத்துவ சேவை, மகப்பேறு பிரிவுகளில் ஆய்வு செய்தார். கர்லம்பாக்கம் ஊராட்சி தாங்கல் காலடியில் அங்கன்வாடி மையம், பள்ளிப்பட்டு நியாயவிலை கடை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பு வைத்திருக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் தரத்தை ஆய்வு செய்தார்.

இதனையடுத்து பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவிகளின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தார். பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலக பதிவேடுகள் கலெக்டர் ஆய்வு செய்து, தூய்மை சுகாதாரப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரியுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பள்ளிப்பட்டு ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தங்குமிடம் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இரவு காக்களூர் இருளர் காலனியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, இரவு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்கினார்.

இன்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜெயக்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அருள்ராஜ், வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக அத்திமாஞ்சேரி பேட்டையில் மாவட்ட கலெக்டரை ஒன்றிய குழு தலைவர் ஜான்சி ராணி விஸ்வநாதன் வரவேற்றார். கொடிவலச மற்றும் பெருமாநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தா பிரகாசம், மாலதி வெங்கடேசன் ஒன்றிய கவுன்சிலர் நதியா நாகராஜன் கோரிக்கை மனு வழங்கினர்.

விசைத்தறி நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தை
பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி ஏஜெண்டுகளிடம் இருந்து நூல் மற்றும் பாவுப் பெற்று லுங்கி உற்பத்தி செய்து கூலி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மீட்டர் ஒன்றுக்கு ₹10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதான கோரிக்கை உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தை சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வுக்கு வந்திருந்தபோது 100க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி நெசவாளர்களிடம் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி, 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் நெசவாளர்கள் கோரிக்கைகள் மீது சுமுக தீர்வு காணப்பட்டு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கலெக்டருடன் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Union ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு...