×

அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியால் செம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம்: அண்ணாமலை கலந்து கொண்ட என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியால் செம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அண்ணாமலையை வரவேற்பதற்காக கிரேனில் பிரமாண்ட மாலையை அவருக்கு அணிவிக்க இருந்தனர். ஆனால் போலீசார் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர். மேலும் நிகழ்ச்சிக்காக தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைகள் முழுவதும் சென்டர் மீடியனில் பாஜ கொடிக் கம்பங்கள், சாலையோரம் பிளக்ஸ் பேனர்கள், எல்இடி விளக்குகள் என அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால் பெருங்களத்தூர் முதல் செம்பாக்கம் பகுதி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சி நடைபெற்றபோது கூட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்ற பாஜ தொண்டரிடம் இருந்து பர்ஸ் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. அண்ணாமலை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டுச் சென்றபோது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மூதாட்டி மயங்கும் நிலைக்குச் சென்றார். அண்ணாமலையின் கான்வாய் வாகனங்களில் ஒன்று ஒரு தொண்டரின் கால் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் கதறினார். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். மேலும் அங்கு நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு குத்தாட்டம் போட்டனர்.

The post அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியால் செம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sembakkam ,Annamalai ,Thambaram ,Man En ,Kamarajapuram ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திட்ட...