×

சிவகங்கை மாவட்டத்தில் நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

சிவகங்கை, பிப். 20: சிவகங்கை மாவட்டத்தில் விளைச்சல் அடையும் நிலக்கடலையை, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் போதிய மழை இல்லாமை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக குறைந்து வருகின்றன.

கிணற்று பாசனம் மற்றும் மோட்டார் மூலம் நீர் பாய்ச்சும் வசதி உள்ளவர்கள் பிற மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தோட்டப்பயிர்களான கீரை வகைகள், கத்தரி, கொத்தவரங்காய், வெண்டை, தக்காளி, மிளகாய், சர்க்கரைவள்ளி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இருப்பினும், மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், கல்லல், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் கடலை பயிரிடப்படுகிறது. மூன்று மாதத்தில் விளைச்சல் கிடைக்கும் என்பதால் கிணற்று பாசனம் மற்றும் மோட்டார் மூலம் நீர் பாய்ச்சும் வசதி உள்ளவர்கள் ஆண்டுக்கு மூன்று முறை கடலை சாகுபடி செய்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண் கொண்ட விளை நிலங்களாகும். இந்த நிலங்களில் கடலை நன்கு விளையும் என்பதால், பல ஆண்டுகளாக கடலை பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு எண்ணெய் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு கடலை அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே நெல்லை அரசு சார்பில் கொள்முதல் செய்வதுபோல் நிலக்கடலையையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘போதிய மழை மற்றும் தேவையான வசதிகள் இல்லாததால், கிணற்று பாசனம் உள்ள நிலங்களில் மட்டுமே கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடலையை கொள்முதல் செய்ய அரசின் உதவி மையம் இல்லாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை இருக்கிறது.

நெல் உள்ளிட்ட பயிர்களைப்போல் கடலை விவசாயத்திற்கும் மானிய உதவிகளை அரசு செய்ய வேண்டும். கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அரசு சார்பில் கடலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொள்முதல் செய்தல், மானிய உதவிகள் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Sivagangai district ,Sivagangai ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதி கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு