மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் 3 நாட்கள் இயற்கை சூழல் முகாம்

 

திருவள்ளூர், ஜன. 28: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து 10 வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் 3 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழல் முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழல் முகாம் நடத்த உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து வெவ்வேறு பள்ளிகளில் இருந்து தலா 5 பேர் என மொத்தம் 50 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் ஆகியோரை 3 நாட்கள் அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சென்ற இயற்கை சூழல் முகாம் அழைத்துச் செல்லும் பேருந்தை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாகலிங்கம் கடந்த 25ம் தேதி தொடங்கி வைத்தார்.

இவர்கள் பழவேற்காடு ஈரநிலப்பகுதி, டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம், கடற்கரை, திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், அதிரம்பாக்கத்தில் கற்கால கருவிகள் கண்டெடுத்த இடம், மீன் விதைப் பண்ணை, பட்டறைபெரும்புதூரில் தொல்லியல் அகழாய்வு செய்யப்பட்ட இடம், இயற்கை வேளாண்மை மையம், பூண்டி விரிவாக்க காப்பு காடு, தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் போன்ற இடங்களை பார்வையிட்டனர்.

இதில் 3ம் நாளான நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் இயற்கை சூழல் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், எவர்சில்வர் குடிநீர் பாட்டில்கள், பைகள் ஆகியவற்றை வழங்கினார். இந்த இயற்கை முகாமிற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இ.ராஜசேகரன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி.தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் 3 நாட்கள் இயற்கை சூழல் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: