தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணி நீக்கம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையில் கண்டெய்னர் இறக்குமதி, ஏற்றுமதி பணியை மேற்கொள்ளும் சரக்கு பெட்டக முனையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக 40க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் கம்பெனியை மூடுவதால் பணப்பலன்கள் வழங்குவதாக கூறி 40 நிரந்தர பணியாளர்களை நிர்வாகம் பணியை விட்டு நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணிகாலத்திற்கு ஏற்ப ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை வழங்கப்பப்படும் என எதிர்பார்த்த நிலையில், தொழிலாளர்களுக்கு குறைந்த அளவில் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் இணைந்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் தனியார் சரக்கு பெட்டக முனையத்தை முற்றுகையிட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட விரோத கதவடைப்பை கண்டித்தும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கதவடைப்பு செய்வது சட்டவிரோதம் என்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நிறுவனத்தை அரசே ஏற்று நடத்திடவும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் விஜயன், மாவட்ட இணைசெயலாளர் நரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயவேல், மாவட்டத் தலைவர் கதிர்வேலு, வழக்கறிஞர் கனகசபை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கோபி நயினார், வாசு, அபூபக்கர், வார்டு உறுப்பினர் பிரபாகரன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணி நீக்கம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: